“வெற்றிமாறன் சார் என்னை வைத்து தமிழ்படம் பண்ணுங்க..” - நேரடியாக விருப்பம் தெரிவித்த ஜூனியர் NTR!
இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர், சைப் அலிகான், பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், நரேன், கலையரசன், முரளி சர்மா, அஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘தேவரா’. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 27-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் சைப் அலிகான் வில்லனாக நடிக்கும் இந்த படத்தில், ஜூனியர் என்.டி.ஆர் அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இளம் வயது Jr NTR-க்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்க, மற்றொரு Jr NTR-க்கு ஜோடியாக நடிகை சுருதி மராத்தி நடித்துள்ளார். 300 கோடி பட்ஜட்டில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி வைப் மெட்டீரியலாக ரீல்ஸில் தெறிக்கவிட்டுவருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸுக்கான புரோமோசன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது, அப்போது நேரடி தமிழ்படம் நீங்கள் நடிக்க வேண்டும் என்ற நெறியாளரின் கேள்விக்கு ‘வெற்றிமாறன் சார் சீக்கிரம் என்னை வைத்து ஒரு தமிழ்படம் பண்ணுங்க’ என்று மேடையிலேயே ஜூனியர் என்டிஆர் கூறியுள்ளார்.
என்னை வைத்து தமிழ்படம் பண்ணுங்க வெற்றிமாறன் சார்..
தேவரா படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராகியிருப்பதால், படத்தின் புரோமோசன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் இயக்குனர் கொரட்டல சிவா, தயாரிப்பாளர் கோசராஜு ஹரி கிருஷ்ணா, ஜூனியர் என்டிஆர், இசையமைப்பாளர் அனிருத், நடிகை ஜான்வி கபூர், கலையரசன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அந்நிகழ்ச்சியில் பேசிய ஜூனியர் என்டிஆர், சென்னை எனக்கு விருப்பமான இடம் என தெரிவித்தார். அப்போது அவரிடம் நேரடி தமிழ்படம் எப்போ சார் பண்ணுவிங்க என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜூனியர் என்டிஆர், “என்னுடைய ஃபேவரைட் டைரக்டர் வெற்றிமாறன் சார், ப்ளீஸ் என்னை வைத்து ஒரு நேரடி தமிழ்படம் பண்ணுங்க சார், அதை நாம தெலுங்குல டப் பண்ணிக்கலாம்” என்று தன்னுடைய விருப்பத்தை மேடையிலேயே தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ஜூனியர் என்டிஆர் உடன் சேர்ந்து படம் பண்ணுவது குறித்து ஏற்கனவே பேசியிருந்த வெற்றிமாறன், “அசுரன் திரைப்படம் முடிந்தபிறகு என்னை ஜூனியர் என்டிஆர் அழைத்து பாராட்டியிருந்தார். அப்போதே படம் செய்வது குறித்து இருவரும் பேசியிருந்தோம், பவுண்ட் ரெடியாக இருக்கிறது, ஆனால் நான் இன்னும் நிறைய எழுதவேண்டியிருக்கிறது, ஒரு படம் முடித்தபிறகு தான் மற்றொரு படத்தில் முழுமையாக இறங்க முடியும்” என்று தெரிவித்திருந்தார். அந்த வீடியோவும் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.