”டெய்லி அப்டேட் கொடுத்துட்டே இருக்க முடியாதுங்க.. புரிஞ்சுக்கோங்க” - ஜூனியர் NTR வேதனை!

”டெய்லி அப்டேட் கொடுத்துட்டே இருக்க முடியாதுங்க.. புரிஞ்சுக்கோங்க” - ஜூனியர் NTR வேதனை!

”டெய்லி அப்டேட் கொடுத்துட்டே இருக்க முடியாதுங்க.. புரிஞ்சுக்கோங்க” - ஜூனியர் NTR வேதனை!

செல்லும் இடமெல்லாம் அப்டேட் கேட்காதீர்கள் என தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் பேசியது பெருமளவில் வைரலாகி வருகிறது.

நடிகர்கள், திரை பிரபலங்கள் எங்கு சென்றாலும் ரசிகர்களும், சில சமூக ஊடகங்களை சேர்ந்தவர்களும் அவர்களது அடுத்த படம் குறித்த தகவலை கேட்டும், அறிவிக்கப்பட்ட படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை கேட்டும் வருவது வாடிக்கையாகவே இருந்தது. குறிப்பாக அஜித்தின் வலிமை பட அப்டேட் கேட்கப்படாத இடமே இருக்காது. இதனாலேயே ValimaiUpdate என்ற ஹேஷ்டேக் ட்விட்டர் ட்ரெண்டிங் பட்டியலில் முதன்மையாகவே இருந்தது.

இப்படியாக தொடர்ந்து அப்டேட் கேட்டு வருவதால் ஒருகட்டத்தில் படக்குழுவினர் சமூக அழுத்தத்திற்கு ஆளாகி நல்ல படைப்பை கொடுப்பதை விட ரசிகர்கள் உள்ளிட்டோரை திருப்தியடையச் செய்யவே படம் எடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள்.

அப்டேட் கேட்பது பற்றி பலர் பல பரிமாணங்களில் தங்களது கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில், தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் ஜூனியர் என்.டி.ஆரும் தற்போது பேசியிருப்பது பரபரப்பாகியிருக்கிறது.

அதன்படி, டோலிவுட் நடிகர் கல்யாண் ராம் நந்தமுரியின் அமிகோஸ் படத்தின் விழா கடந்த ஞாயிறன்று (பிப்.,05) நடைபெற்றது. இதில் ஜூனியர் என்.டி.ஆரும் பங்கேற்றிருந்தார். அப்போது மேடையில் கல்யாண் ராம் மற்றும் அமிகோஸ் படக்குழுவினர் குறித்து ஜூனியர் என்.டி.ஆர் பேசிக் கொண்டிருக்கும் போது ரசிகர்கள் NTR30 குறித்த அப்டேட்டை கொடுக்கும்படி கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு, “உங்களிடம் சிறிய வேண்டுகோளை முன்வைக்கிறேன். படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் போதே எதையும் வெளிப்படுத்திவிட முடியாது என்பதை நேரடியாக நேர்மையாகவே சொல்லிக்கொள்கிறேன். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணிநேரமும் அப்டேட் கொடுத்துக் கொண்டே இருக்க முடியாது. அது கடினம். உங்களுடைய ஆர்வம் எங்களுக்கு நன்றாகவே புரிகிறது.

ஆனால் இப்படி அடிக்கடி அப்டேட் கேட்பது தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் பெரிய அழுத்தத்தையே கொடுக்கிறது. உங்களுடைய ஆவலுக்காக அப்படியெல்லாம் உடனடியாக அப்டேட் கொடுத்திட முடியாது. அப்படியே எதையாவது வெளியிட்டு அது பிடிக்காமல் போனால் அதையும் ட்ரோல் செய்துவிடுகிறீர்கள். இது எனக்கு மட்டுமல்ல. எல்லா திரைக்கலைஞர்களும் இந்த அழுத்தத்தை அனுபவிக்கிறார்கள்.

ஏதேனும் அப்டேட் இருந்தால் எங்கள் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் சொல்வதற்கு முன்பு உங்களுக்குதான் தெரிவிக்கிறோம். ஏனெனில் நீங்கள்தான் எங்களுக்கு அதி முக்கியமானவர்கள். எனக்காக மட்டுமல்ல மற்ற நடிகர்களுக்காகவும்தான் பேசுகிறேன்.

படம் குறித்த உறுதியான அப்டேட் இருந்தால் கண்டிப்பாக வெளியிடுவோம். சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்திகளை வைத்து தயாரிப்பாளர்கள் மீது எந்த அழுத்தத்தையும் தினிக்காதீர்கள்.” என்று ஜூனியர் என்.டி.ஆர். பேசியிருந்தார்.

இதைத் தொடர்ந்து, “பிப்ரவரி மாதத்திற்குள் NTR30-ன் படம் தொடங்கும். மார்ச் மாதம் முதல் ஷூட்டிங் இருக்கும். படம் 2024ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி வெளியாகும்.” என்று கடைசியில் அப்டேட் கொடுத்திருக்கிறார் ஜூனியர் என்.டி.ஆர். கொரட்டலா சிவா இயக்கத்தில் NTR30 உருவாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com