இழுபறியில் ’ஜனநாயகன்’.. நீதிமன்றத்தில் நடந்தது என்ன? முழு விபரம்!
நடிகர் விஜயின் கடைசி திரைப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’ஜனநாயகன்’. இப்படம் கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில், தணிக்கைச் சான்று கிடைக்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இதனால், படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்திற்கு தணிக்கைச் சான்று வழங்கவேண்டும் என படத் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்திற்குச் சென்ற நிலையில், படத்திற்கு தணிக்கைச் சான்று வழங்க வேண்டும் என உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிற்கு எதிராக தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்தது தணிக்கை வாரியம். இதையடுத்து, மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை டிவிசன் பெஞ்ச், தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதித்தது.
இதனை எதிர்த்து படத் தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நாடிய சூழலில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் முறையிட உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர். அதன்படி, சென்னை டிவிசன் பெஞ்ச் தீர்ப்பை எதிர்த்து, படத் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா, நீதிபதி அருள் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
தொடர்ந்து வழக்கு விசாரணையின்போது, தணிக்கை வாரியம் தரப்பில் கூறுகையில், ”படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்ப தணிக்கை வாரியம் முடிவு செய்தது குறித்து பட நிறுவனத்துக்கு ஜனவரி 5ஆம் தேதி தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், 6-ஆம் தேதி சான்று கோரி பட நிறுவனம் வழக்கு தாக்கல் செய்திருக்கிறது.
’14 காட்சிகளை நீக்க வேண்டும் எனவும், அதன்பின் படத்தை மீண்டும் பார்த்து முடிவெடுக்கப்படும்’ எனவும் தெரிவிக்கப்பட்டது. அது இடைக்கால முடிவு. ஆனால், 14 காட்சிகளை நீக்கிவிட்டதால், சென்சார் சான்று வழங்கக் கோர முடியாது. மறு ஆய்வுக்கு 20 நாட்களுக்கு மேல், குழு அமைக்கவில்லை என்றால், உயர்நீதிமன்றத்தை அணுகலாம். ’ஜனநாயகன்’ படம் தொடர்பாக புகார் வந்ததால், மறு ஆய்வு குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. படத்தைப் பார்த்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்க குழு உள்ளது. அந்த குழுதான் படத்தைப் பார்த்து பரிந்துரை மட்டுமே வழங்க முடியும். படத்துக்குச் சான்றிதழ் வழங்குவது குறித்து சென்சார் போர்டுதான் இறுதி முடிவை அறிவிக்கும்” எனவும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பிலிருந்து, ” ‘ஜனநாயகன்’ திரைப்படம் 9ஆம் தேதி வெளியிட முடிவு செய்ததால் அவசர வழக்காக விசாரிக்க தனி நீதிபதி முன் முறையிடப்பட்டது. படத்துக்கு எதிரான புகார் தங்களுக்கு வழங்கப்படவில்லை. படத்தை மறு ஆய்வுக்கு அனுப்புவதாக தகவல் மட்டும் தெரிவிக்கப்பட்டது. அது சம்பந்தமான உத்தரவு வழங்கப்படவில்லை” எனத் தெரிவித்தது.
மேலும், “ஜனநாயகன் திரைப்படத்தை பார்வையிட்ட குழுவினர், படத்தைப் பார்த்து முடித்ததும் தங்கள் கருத்துகளை பதிவு செய்து பரிந்துரை வழங்க வேண்டும். மாறாக, வீட்டுக்குச் சென்றுவிட்டு நான்கு நாட்களுக்குப் பின் புகார் அளிக்க முடியாது. சென்சார் தொடர்பான அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது. ஏற்கெனவே, நீக்கப்பட்ட காட்சிகளையே நீக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரில் கூறப்பட்ட காட்சிகள் முன்னதாகவே நீக்கப்பட்டு விட்டன. சான்று வழங்குவது தொடர்பாக தகவல் தெரிவித்து விட்டால் இரண்டு நாட்களில் சான்று வழங்க வேண்டும்” எனவும் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி, “ஜனநாயகன் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, சென்சார் போர்டு தங்கள் நடவடிக்கைக்கு ஆதரவாக பதிலை எடுத்துவைக்க அவகாசம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஒரேநாளில் அனைத்து நீதிமன்ற நடைமுறைகளையும் முடித்து உத்தரவு பெற வேண்டும் என்பதை ஏற்க முடியாது. திரைப்படம் என்பது வணிகம் எனும்போது தயாரிப்பாளர்கள் சான்று பெறும் முன் ரிலீஸ் தேதியை எப்படி அறிவிக்க முடியும்” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த தயாரிப்பு நிறுவனம் தரப்பு வழக்கறிஞர், ”ஏற்கெனவே 22 நாடுகளில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. படம் ரிலிஸ் தேதி அறிவிக்க சான்று பெறும்வரை காத்திருக்கும் நடைமுறை இங்கு இல்லை. பாலிவுட்டிலும் படங்கள் வெளியீட்டு தேதி சான்று பெறும் முன்பே அறிவிக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

