தியேட்டர் ரசிகர்களுக்கு ஏமாற்றம்: ஓடிடியில் வெளியாகும் தனுஷின் 'ஜகமே தந்திரம்'!
தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ தியேட்டரிலா? ஓடிடியிலா? என்ற எதிர்பார்ப்புகள் கிளம்பிவந்த நிலையில் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள தனுஷின் 'ஜகமே தந்திரம்' திரைப்படம் 2020, மே மாதத்தில் வெளியாகவிருந்தது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக தள்ளிப் போனது. முன்னதாக படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதாக ரசிகர்களுக்கு உறுதியளித்த 'ஜகமே தந்திரம்' தயாரிப்பாளர், மனம் மாறி, படத்தை ஓடிடி தளத்துக்கு விற்றதாக தகவல்கள் கசிந்தது. ஆனால் தனுஷ் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் விரும்பவில்லை என சொல்லப்பட்டது.
தமிழக அரசும் அண்மையில் தியேட்டர்களில் 100 சதவித இருக்கைக்கு அனுமதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், படம் தியேட்டரில்தான் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று ஜகமே தந்திரம் ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில் விரைவில் வெளியாகவிருக்கிறது என்று அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

