'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!

'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!

நெட்ஃப்ளிக்ஸில் 'டாப் 10' பட்டியலிடப்படுவது, அதிகம் பார்க்கப்பட்டதன் அடிப்படையில் தானாக நடக்கிறதா அல்லது நிர்வாகமே இப்படி பட்டியல் போடுகிறதா என்பது தெரியாது. ஆனால், அதில் லிஸ்ட் ஆகும் படைப்புகள் பலவும் பெரிதாக ஏமாற்றுவதில்லை. அந்தப் பட்டியலில் கண்டெடுத்து பேரனுபவம் பெற்ற சமீபத்திய படைப்புதான் 'இஸ் லவ் எனஃப்? சார்' (Is Love Enough? Sir) என்னும் அற்புதமான சினிமா.

திரைப்படம்தான் பார்த்தோமா, அல்லது அழகான கவிதையை வாசித்தோமா என்று யோசிக்கவைக்கும் படைப்பு இது.

எந்தப் பாகுபாடும் பார்க்காத ஒன்றே 'காதல்' என்பது நம்மில் பலரது நம்பிக்கை. ஆனால், காதலில் விழுவதற்கு முன்பே பல புறக்காரணிகளைக் கருத்தில்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் காதலர்கள் இருப்பதுதான் காதலுக்கு நம் சமூகம் கற்றுத்தந்திருக்கும் பாடம்.

நம் சமூகத்தில் காதலுக்கு சாதி, மதம் முதலான காரணிகள் தடையாக இருப்பது யாவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால், காதலுக்கும் காசுக்கும் மிகப் பெரிய தொடர்பு உண்டு என்பதை நம்மில் பலரும் கண்டுகொள்ளாமல் போய்விடுகிறோம் அல்லது கண்டுகொள்ள மறுக்கிறோம். ஆம், இருவரிடையிலான காதலில் பெரும் தாக்கத்தைத் தரவல்லது பொருளாதார நிலை. இது, நம் வெகுஜன சினிமாவில் சரியாகப் பதிவு செய்யப்படுவதில்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

"நீங்க சொல்றது தப்பு. ஏழை ஹீரோவை பணக்கார ஹீரோயின் காதலிக்கும் கதையை எத்தனையோ படங்களில் பார்த்திருக்கிறோமே... இன்று வரைக்கும் இது தொடருதே"-ன்னு சிலர் வாதிக்கலாம். இந்த அணுகுமுறைக்குள்ளும் ஆணாதிக்க சிந்தனை ஒட்டியிருப்பதை உணரமுடியும். ஆம், நாயகன் தனது ஹீரோயிஸ செயல்களால் பணக்கார நாயகிகளைக் கவர்ந்து காதல் மலர்வதைக் கண்டிருக்கிறோம்; கண்டு வருகிறோம். இப்படி நூற்றுக்கணக்கான படங்கள் நிச்சயம் தேறும்.

ஆனால், எத்தனை படங்களில் ஏழை ஹீரோயினை பணக்கார ஹீரோ காதல் கொள்வதுபோல் பார்த்திருக்கிறோம்? என்னதான் பொருளாதாரத்தில் விளிம்புநிலையில் இருந்தாலும், தன் வீரதீர செயல்களை உள்ளடக்கிய ஹீரோயிஸத்தால் பெண்களை வசீகரிப்பதுபோல் ஹீரோ காட்டப்படுவதன் பின்னாலுள்ள உளவியலும் உற்று நோக்கத்தக்கதுதான்.

இந்த க்ளீஷேக்களை உடைத்தெறிவது மட்டுமின்றி, காதலையும் காதல் உணர்வுகளையும் முடக்கும் சக்தியாக பொருளாதார நிலை என்னும் ஆயுதத்தை ஏந்தியிருக்கும் சமூகத்தைக் கண்ணாடி போல காட்டி, அதில் நம்மை ரியாக்ட் செய்ய வைத்திருக்கிறது 'இஸ் லவ் எனஃப்? சார்' திரைப்படம்.

ரஹானே கேரா என்னும் இயக்குநரின் முதல் படைப்பு. இந்தி, ஆங்கிலம், மராத்தி மொழிகள் பேசும் சினிமா. 2018 கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டும், விருதுகளைக் குவித்தும் கவனத்தை ஈர்த்த 'இஸ் லவ் எனஃப்? சார்' இப்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நெட்ஃப்ளிக்ஸில் ரிலீஸாகி நல்ல வரவேற்புடன் ஹிட்டடித்திருக்கிறது.

மகாராஷ்டிராவின் குக்கிராமத்திலிருந்து அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீட்டு வேலைக்காக மும்பை வருகிறார் 19 வயது விதவைப் பெண் ரத்னா. அந்த ஆடம்பரக் குடியிருப்பில் ஒற்றை ஆளாக வசிக்கிறார் ஆர்க்கிடெக்ட் அஸ்வின். வெற்றிகரமான தொழிலதிபர் குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு நடக்கவிருந்த திருமணம் தடைபடுகிறது. பர்சனல் வாழ்க்கையில் ஏமாற்றம். இந்த இருவரின் அன்றாட வாழ்க்கைதான் திரைக்கதை.

இளம் விதவையாக, கிராமத்தில் வாழ்க்கையைத் தொலைத்த ரத்னா, பரிசுத்தமான சுதந்திரத்தை மும்பையில் சுவாசிக்கிறார். ஃபேஷன் டிசைனர் ஆகவேண்டும் என்ற பேரார்வத்துடன் இயங்குகிறார். கிடைக்கும் ஊதியத்தில் தங்கையைப் படிக்கவைக்கிறார். அஸ்வினோ விரக்தியில் நாள்களைக் கடத்துகிறார். அஸ்வின் நிலையைக் காணும் ரத்னா, தன்னளவில் உத்வேகமூட்ட முனைந்து சில வார்த்தைகள் பேசுகிறார்.

"சார், உங்களுக்கு ஒண்ணு தெரியுமா, எனக்கு கல்யாணம் பண்ணி கொடுத்த கொஞ்ச நாள்லயே என் புருஷன் இறந்துட்டார். வரதட்சணை வேணான்ம்னு சொன்னதால உடனே கல்யாணம் பண்ணி கொடுத்துட்டாங்க. கிராமத்துல எல்லாம் அப்படித்தான்..."

"ஓஹ்... எனக்கு இந்த விஷயம் தெரியாது, சாரி."

"பரவால்லை சார். என் கிராமத்துலயே இருந்திருந்தா என் வாழ்க்கை அதோட முடிஞ்சிபோயிருக்கும். ஆனா, மும்பைல நான் ரொம்ப நல்லாவே இருக்கேன். சர்வன்ட்தான், ஆனாலும் சம்பள வேலை. என் தங்கச்சியைப் படிக்க வைக்கிறேன். வாழ்க்கை எந்தக் காரணத்தாலும் முடிஞ்சி போயிடாது சார்... ஏதோ சொல்லத் தோணுச்சு" என்று சொல்லிவிட்டு நகர்வாள். அஸ்வின் அசந்துவிடுவான், பார்வையாளர்கள் போலவே. ஆம், எவ்வளவு பெரிய வலியையும் அலட்சியமாக அணுகும் கெத்து அது.

அதன்பின், இருவரிடையே இயல்பாக கூடும் நெருக்கம், ஒருவருக்கு ஒருவரை ஆழமாகப் புரிந்துகொள்ளும் பக்குவம் எல்லாமே உணர்வுபூர்வமாக அடுத்தடுத்த நிலைகளில் நகரச் செய்யும். சாதாரண கிராமத்துப் பெண்ணாக அறிமுகமாகி, தன் பண்புகளால் பார்க்கப் பார்க்க நமக்கே அழகாகத் தெரியும்போது, அஸ்வினுக்கு நிச்சயம் ரத்னா பேரழகாகத் தெரிவாள்தானே?!

ஆம், அஸ்வினுக்கு ரத்னா மீது காதல் பெருக்கெடுக்கிறது. அதைப் பரிமாறும் வேளையில் நெகிழ்ந்துருகும் ரத்னா மெதுமெதுவாக பக்குவமாக அணுக ஆரம்பிக்கிறார். ரத்னாவின் அணுகுமுறையின் அர்த்தம் கொஞ்சம் கொஞ்சமாக நமக்குப் புரிய ஆரம்பிக்கும். ஆம், எலைட் லைஃப்ஸ்டைலைப் பின்புலமாகக் கொண்ட ஆண், தன் வீட்டு வேலைக்காரப் பெண்ணுடன் காதல் கொண்டால், அந்த ஆணின் உறவுகளும், சமூகமும் எப்படிப் பார்க்கும் என்பதை சிற்சில காட்சிகளிலேயே நமக்கும் மண்டையில் உரைக்கவைக்கிறார் இயக்குநர்.
வேலைக்காரப் பெண்களை மேல்தட்டு மக்கள் கொண்டிருக்கும் பார்வையை இன்றுவரை பதியப்படும் மலிவான ஜோக்குகளே சான்று. இந்தப் படத்தில் வேலைக்காரப் பெண்ணை ப்ரொட்டாகனிஸ்டாக மட்டுமின்றி, எந்த இடத்திலும் கண்ணியம் குறைவாக காட்டாமல் பார்த்துக்கொண்டதே இந்தப் படைப்பின் மேன்மையைப் புரியவைக்கிறது.

இதில் சொல்லப்பட்ட இன்னொரு அழகான மெசேஜ், 'City Boys are not So bad'. பொதுவாக நகரத்தில் வாழும் இளைஞர்கள் எப்போதும் எதற்கும் கவலைப்படாதவர்களாகவும், சுயநலமானவர்களாகவுமாகவே சித்தரிக்கப்படுகிறார்கள். ஆனால், இந்தப் படத்தில் அஸ்வின், ரத்னாவின் லட்சியத்திற்கு அவரை ஊக்குவிக்கும் காட்சி நம்மை நெகிழவைக்கிறது. தன் நண்பர் ஒருவர் ரத்னாவை திட்டியதற்கு அவரிடம் செய்த தவறை சுட்டிட்டிக்காட்டும் இடத்திலும், தங்கையின் திருமணத்திற்காக கிராமத்திற்குச் சென்ற ரத்னாவிடம் தொலைபேசியில் விசாரிக்கும்போதும் நிஐமாகவே 'சிட்டி பாய்ஸ் ஆர் நாட் சோ பேட்' என்றுதான் தோன்றுகிறது.

என்னதான் காதல் கண்ணை மறைக்கிறது, காதலுக்கு கண்ணில்லை என்று சொன்னாலும், அஸ்வினின் கண்ணியம் நம்மை அசரவைக்கிறது.

தனியாக வசிக்கும் இளைஞர், வீட்டில் தன்னை நன்றாக பார்த்துக்கொள்ளும் வேலைக்காரப் பெண், ஏதோ சபலம் என்றெல்லாம் இல்லாமல், அந்த இளைஞன் அஸ்வினைக் கவர்ந்ததே ரத்னாவின் சுயாதீன இயல்புதான் என்பதையும், ஒரு பெண்ணின் லட்சியத்தை மதித்து அவள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பது காதலைவிட அழகானது என்பதையும் கவிதைபோல் சொல்லி இருக்கிறார் இயக்குநர்.

படத்தின் முடிவு, நாம் இந்த சமூகம் குறித்து யோசிக்க ஆரம்பிக்கும் இடமாக இருக்கும். இதை வாசித்துவிட்டு, ரொம்ப ரொம்ப நிதமானமாக நகரும் படம், போரடிக்கக் கூடும் என்றெல்லாம் நினைத்துவிட வேண்டாம். மிகச் சில கேரக்டர்களே என்றாலும்கூட, ஆரம்பம் முதல் எந்த இடத்திலும் சுவாரசியம் குறையாமல், அடுத்து என்ன, அடுத்து என்ன என்று ஆர்வத்துடன் நகரும் சினிமாதான் இது.

ஒவ்வொரு முகமும் தெரிந்த, சில நூறு பேர் மட்டுமே வாழும் கிராமத்தில், துயரமான வாழ்க்கையை நடத்த வேண்டிய நிலை; ஆனால், பல லட்சம் தெரியாத முகங்களுக்கிடையே நகரத்தில் ஒரு பெண்ணுக்கு மகிழ்ச்சியான வாழும் சூழல் கிடைப்பதும் நம்மை வெகுவாக யோசிக்கவைக்கும்.

அவசர அவசரமாக ஊருக்குத் திரும்பும்போது மிக நிதானமாக வளையல்களை கழட்டி பையில் ஒளித்துவைக்கும் அந்தக் காட்சி ஒன்றுபோதும் இன்றைய கிராமங்கள் பெண்களைச் சுமக்கவைக்கும் வலிகளைக் காட்டும்.

"காதல் என்று வந்துவிட்டால் காசெல்லாம் ஒரு பொருட்டே இல்லை" என்று யாராவது சொன்னால், சிரிக்கதான் தோணுது. காதல் உணர்வுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதே பொருளாதார நிலை. அப்படித்தான் நம் சமூகம் எப்போதுமே இருக்கிறது என்பதை நம்மை வருடியபடி சொல்லிச் செல்கிறது, நெட்ஃப்ளிக்ஸில் காணக் கிடைக்கும் 'Is Love Enough? Sir' என்னும் இந்த சினிமா.

அதேவேளையில், உணர்வுபூர்வமான ஓர் உன்னதக் காதல் கதையை வாசித்த அனுபவமும் நிச்சயம் ரசிகர்களுக்கு கிடைக்கும்.

- தமிழ்செல்வி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com