\
Dhanush
Dhanushweb

விஜய்க்குப் போட்டியா? கொடி, மேடை, நலத்திட்டம்.. அரசியலுக்குள் வருகிறாரா தனுஷ்?

சிவாஜி கணேசன், பாக்யராஜ், டி.ராஜேந்தர், சரத்குமார் உள்ளிட்ட பலரால் அந்த வெற்றியை எட்ட முடியவில்லை. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்தாலும், முதல்வராக முடியவில்லை.
Published on
Summary

தமிழகத்தில் நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. சிவப்பு கொடி, ரசிகர் மன்ற அமைப்பு, திருவள்ளூரில் நடந்த பிறந்தநாள் விழா அனைத்தும் அரசியல் மாநாட்டை ஒத்திருந்தன. உரையில் அஜித் வசனம், “ஓம் நமசிவாய, ஜெய்ஹிந்த்” என முடித்து, ஆட்டோ உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கியதால், ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் பாதையை நோக்கி நகர்கிறாரா என்ற விவாதம் எழுந்துள்ளது.

செய்தியாளர்; M. மீரா

தமிழகத்தில் பல சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வந்திருந்தாலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் தற்போதைய முதல்வர் விஜய் ஆகியோர் மட்டுமே மக்கள் மத்தியில் பெரிய அரசியல் செல்வாக்கை உருவாக்கியுள்ளனர். சிவாஜி கணேசன், பாக்யராஜ், டி.ராஜேந்தர், சரத்குமார் உள்ளிட்ட பலரால் அந்த வெற்றியை எட்ட முடியவில்லை. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்தாலும், முதல்வராக முடியவில்லை.

Vijay, MGR & Jayalalithaa
Vijay, MGR & Jayalalithaaweb

இந்த நிலையில், நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா என்ற கேள்வியை, அவரது சமீபத்திய நடவடிக்கைகள் எழுப்பியுள்ளன. அண்மையில், தனது ரசிகர் மன்றத்துக்கான சிவப்பு நிறக் கொடியை, அதில் தனது உருவத்துடன் அவர் அறிமுகப்படுத்தினார். இதையடுத்து, இது அரசியல் பயணத்திற்கான முன்னோட்டமா என்ற விவாதம் சமூக வலைதளங்களில் தொடங்கியது.

மேலும், திருவள்ளூரில் நடைபெற்ற அவரது பிறந்தநாள் விழாவும் அரசியல் மாநாட்டை நினைவூட்டும் வகையில் அமைந்திருந்தது. நிகழ்ச்சி நடைபெற்ற இடம் முழுவதும் ரசிகர் மன்றக் கொடிகள் ஏற்றப்பட்டிருந்தன. மேடையில் பேசிய தனுஷ், ’ராயன்’ திரைப்படத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டதை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்தார்.

Dhanush
Dhanushweb

அதன்பின், "இது கூட்டம் அல்ல, என் குடும்பம்... அசுரக் குடும்பம்" என்று ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பேசினார். மேலும், “தனது ரசிகர்கள் யாரையும் அவதூறாக விமர்சிக்கவோ, வதந்திகளைப் பரப்பவோ மாட்டார்கள்; அன்பை பகிரும் மனிதர்கள்” என்றும் குறிப்பிட்டார். இந்தப் பேச்சு, சமூக வலைதள அரசியலை முன்னிறுத்திவரும் விஜய் ஆதரவாளர்களுக்கு மறைமுக பதிலா என்ற விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், நடிகர் அஜித்தின் "Never Ever Give Up" வசனத்தையும் மேற்கோள் காட்டிய தனுஷ், தனது உரையை "ஓம் நமசிவாய... ஜெய்ஹிந்த்" என்று முடித்தார். நிகழ்ச்சியின் முடிவில் ஆட்டோக்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதுவரை ரசிகர் நலச் செயல்பாடுகளில் மட்டுமே கவனம் செலுத்திய தனுஷ், தற்போது பொதுநல உதவிகளையும் முன்னிறுத்தத் தொடங்கியிருப்பது, அவர் அரசியல் களத்தில் கால் பதிக்கத் தயாராகிறாரா என்ற கேள்வியை வலுப்படுத்தியுள்ளது. அதேசமயம், ரஜினிகாந்த் முன்வைத்த ஆன்மிக அரசியல் பாதையை தனுஷ் தொடர முயல்கிறாரா என்ற விவாதமும் எழுந்துள்ளது. மறுபக்கம், முதல்வர் விஜயக்கு எதிராக அரசியல் களத்தில் வர இருக்கிறாரா என்ற விவாதமும் எழுந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com