விக்ரம் படத்தில் நடிப்பது ஏன்? கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் விளக்கம்
விக்ரம் படத்தில் நடிப்பது ஏன் என்பது பற்றி கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் விளக்கம் அளித்துள்ளார்.
‘டிமான்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ படங்களை அடுத்து, அஜய் ஞானமுத்து இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இதில், பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
‘இந்தப் படத்தின் முக்கியமான கேரக்டர் ஒன்றில் நடிக்க இர்பான் பொருத்தமாக இருப்பார் என்று நினைத்தேன். அவர் நடித்திருந்த சில டப்ஸ்மாஷ் வீடியோக்களை பார்த்து இந்த முடிவை எடுத்தேன். அவரிடம் கதை சொன்னேன். இதற்கு நான் சரியாக இருப்பேனா என்று கேட்டுக்கொண்டிருந்தார். கண்டிப்பாக நீங்கள்தான் பொருத்தமாக இருப்பீர்கள் என்றேன். நடிக்க சம்மதித்தார்’ என்கிறார் இயக்குநர் அஜய் ஞானமுத்து.
கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கூறும்போது, 'நான் சில ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டிருக்கிறேன். ஆனால், சினிமா, எனக்கு நிச்சயமாக புதிய உலகம். இயக்குநர் அஜய் ஞானமுத்து, வடதோராவில் உள்ள எனது வீட்டுக்கு வந்து கதை சொன்னார். அவரிடம் நான் கேட்ட முதல் கேள்வி, ‘எதற்கு நான் நடிக்கணும்?’ என்பதுதான். அவர் அந்த கேரக்டரையும், நான்
நடித்தால் எப்படி இருக்கும் என்று சொன்னதை கேட்டதும் சம்மதித்துவிட்டேன். இந்தப் படத்தில் விக்ரமுடன் நடிப்பது பெருமையான விஷயம். அவர் சிறந்த நடிகர். ஏராளமான பார்வையாளர்கள் முன்பு நான் கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். அதனால் எனக்குப் பதற்றம் ஏதும் இல்லை. அந்த உணர்வோடு எந்தப் பதற்றத்தையும் ஒப்பிட முடியாது. குறைந்தபட்சம் சில ரீடேக்குகள் வாங்குவேன்’ என்றார்.