விஜய் ‘சர்கார்’ டீசரில் ஒளிந்திருக்கும் உண்மைகள்?

விஜய் ‘சர்கார்’ டீசரில் ஒளிந்திருக்கும் உண்மைகள்?
விஜய் ‘சர்கார்’ டீசரில் ஒளிந்திருக்கும் உண்மைகள்?

கடுமையான எதிர்பார்ப்புகளுக்கு இடையே சர்காரின் டீசர் இன்று மாலை வெளியானது. படத்தின் பாடல் வெளியீட்டின் போதே அதிரடியான அரசியல் கருத்துகளை பேசி நடிகர் விஜய் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் இந்த டீசரில் இடம்பெற்றுள்ள காட்சிகளையும், விஜய் பேசிய அரசியல் வசனங்கள் குறித்தும் பார்க்கலாம்

ரியல் டயலாக்ஸ்:

சென்னையில் நடைபெற்ற ‘சர்கார்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு தான் ஹைலைட். அது இசை வெளியீட்டு விழாவா அல்லது அரசியல் மேடையா என்ற சந்தேகம் வரும் அளவுக்கு அரசியல் பஞ்ச்களை அள்ளி வீசினார் விஜய். “எல்லோரும் தேர்தலில் நின்றுவிட்டு சர்கார் அமைப்பார்கள். ஆனால் நாங்கள் ‘சர்கார்’ அமைத்துவிட்டு தேர்தலில் நிற்கப்போகிறோம்.” என்று பரபரப்பான அரசியல் கருத்து தெரிவித்திருந்தார். மேலும்  “நிஜத்தில் முதலமைச்சரானால், முதலமைச்சராக நடிக்க மாட்டேன். உண்மையாக இருப்பேன். ஒருவேளை உண்மையில் முதல்வரானால், லஞ்சம், ஊழலை ஒழிக்க என்ன நடவடிக்கை எடுக்கவேண்டுமோ? அதனை செய்வேன்” என்று கூறியிருந்தார். 

“வெற்றிக்காக எவ்வளவு வேண்டுமானாலும் உழைக்கலாம். ஆனால், நாம் வெற்றியடைந்துவிடக்கூடாது என்பதற்காகவே ஒரு கூட்டமே உழைத்துக் கொண்டிருக்கிறது. என்ன செய்வது? அதுதான் இயற்கைன்னு விட்டுவிட வேண்டியதுதான். உசுப்பேத்துறவங்ககிட்ட உம்முன்னும் கடுப்பேத்துறவங்ககிட்ட கம்முன்னு இருந்தா, வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்” என்ற பஞ்ச் டயலாக்கை தட்டி விட்டு கைதட்டலை பெற்றார்.

ரீல் டயலாக்ஸ்:

இசை வெளியீட்டு விழாவிலேயே அதிரடி பஞ்ச்களை பேசியவர், டீசரில் எந்த மாதிரியான பஞ்ச் பேசுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். டீசரின் முடிவில் வரும் பஞ்ச் வசனம் படத்திற்கானது மட்டுமானது போல தெரியவில்லை, ''கெட் ரெடி போக்ஸ், உங்க ஊரு தலைவனை தேடி புடிங்க இதுதான் நம்ம சர்கார்'' என்ற வசனம் விஜய்யின் அரசியல் எண்ட்ரிக்கான வசனம் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். ''இன்னும் ஒரு நாளில் என்னென்னெவெல்லாம் மாறும், மாறப்போகுதுன்னு ஓரமா நின்னு வேடிக்கை மட்டும் பாருங்க, ஐ எம் எ கார்ப்ரேட் கிரிமினல்'' என்றது மற்றொரு வசனம், படத்தில்தான் அரசியல்வாதிகளுக்கு எதிராக களம் இறங்கிய பின் விஜய் பேசுவார் என மாஸ் காட்டுகிறார்கள் அவரது ரசிகர்கள். 

டீசரில் வரும் பைக் காட்சி:

டீசரில் வரும் பைக் காட்சி தான் படத்தின் முக்கிய திருப்புமுனை என ஏற்கெனவே செய்திகள் பகிரப்பட்டன. சென்னை மவுண்ட் ரோட்டில் இரவில் படமாக்கப்பட்ட இந்தக் காட்சியில் 2 ஆயிரம் இளைஞர்களுடன் சேர்ந்து பைக்கில் விஜய் வலம் வருவதை போல அமைந்துள்ளது. இந்த பைக் சீன் தான் படத்தில் ஃபயர் சீன் என்று கூறப்படுகிறது. இளைஞர்களுடன் விஜய் சேர்ந்து பைக்கில் பயணித்த காட்சி படத்தில் எப்படியும் 15 நிமிடங்களுக்கு மேல் வரும் என்றும் தெரிய வந்துள்ளது. 

வெள்ளை உடை இளைஞர்கள்: 

அரசியல்வாதிகளுக்கு எதிராக களம் இறங்கும் விஜய்க்கு துணையாக தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் இளைஞர் பட்டாளம் இருப்பது போல தெரிகிறது. வெள்ளை உடை அணிந்து இருக்கும் இளைஞர் பட்டாளம் விஜய் பஞ்ச் பேசும் இடங்களில் எல்லாம் இருக்கிறார்கள். 

அரசியல்வாதி வரலட்சுமி:

படத்தில் அரசியல்வாதிகளுக்கு எதிராக விஜய் களம் இறங்குவார் எனக் கூறப்படுகிற நிலையில் முக்கிய அரசியல்வாதிகளாக  ராதாரவி, பழ.கருப்பையா ஆகியோர் டீசரில் காட்டப்படுகின்றனர். இதில் வரலட்சுமி அரசியல் வாதியாகவோ அல்லது அரசு அதிகாரியாகவோ இருக்கலாம், நெகட்டிவ் ரோல் செய்திருப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு எனக் கூறப்படுகிறது. ஆக, விஜய்யுடன் மோதும் சக்தியாக நிச்சயம் இருப்பார் நடிகை வரு.

சில நினைவுகள்:

படத்தில் வரும் இரண்டு காட்சிகள் தமிழகத்தில் நடந்த சில நிகழ்வுகளை நினைவுப்படுத்துகின்றன. குடும்பத்துடன் தீயிட்டு தற்கொலை செய்துகொள்ளும் காட்சி திருநெல்வேலி சம்பவத்தை நினைவுப்படுத்துக்கிறது. அதுபோல கண்டெய்னரில் லாரியில் காட்டப்படும் கட்டுக்கட்டான பணம் இருக்கும் காட்சி திருப்பூரில் நடந்த சம்பவத்தை நினைவுப்படுத்துகின்றன.

மழையில் நனைந்தபடி விஜய்க்கு ஒரு பாடல் காட்சி உள்ளது. அதில் ‘பாட்ஷா’ படத்தில் ரஜினி மின் கம்பத்தின் கீழ் கட்டி வைத்து அடிப்பதை போலவே இந்த ‘சர்கார்’பாடல் காட்சி தெரிகிறது.

கீர்த்தி சுரேஷ் இந்தப் படத்தில் தேர்தல் அதிகாரியாக வருவதை போல தெரிகிறது. அவர் விஜய்க்கு முதன்முதலாக அறிமுகமாகும் இடம் வாக்குச்சாவடி என ட்ரெய்லர் க்ளூ கொடுக்கிறது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com