சீ சீ சீ ரே நானி (Chi Chi Chi Re Nani).. 30வருட பழைய பாடல் திடீர் வைரல்! அதன் சுவாரசிய கதை தெரியுமா?
1992-ல் வெளியான ஓடிய நாட்டுப்புற பாடல் தொகுப்பு `பலிபுல்' (Baliphul). இந்த தொகுப்பில் இடம்பெற்ற 8 பாடல்களில் ஒரு பாடல் தான் இந்த சீ சீ சீ ரே நானி. பிரபல ஓடியா இசைக் கலைஞரான சத்ய நாராயணன் அதிகாரி இந்த பாடலுக்கு இசையமைத்து, பாடல் எழுதி, பாடியும் இருக்கிறார்.
பழங்குடிகள் சூழ, ஒடிசாவின் கோராட்புட் பகுதியில் பிறந்து வளர்ந்த சத்யா ஒரு வழக்கறிஞர். கூடவே தான் வளர்ந்த பகுதியின் கலாச்சாரத்தையும் அதன் தொன்மை மிகுந்த நாட்டுப்புற இசையை மற்றும் பாடல்களை பரவலாக கொண்டு சேர்க்க வேண்டும் என்ற முனைப்பிலும் இயங்கினார்.
ஒடிசாவின் மரபுகளை அதன் ஆன்மா சிதையாமல் அதே நேரம் அனைவருக்கும் சென்று சேரும் வகையிலும் பாடல்களை உருவாக்கினார். அப்படியான பாடல்களில் ஒன்றுதான் சீ சீ சீ ரே நானி பாடலும்.
சரி இந்தப் பாடல் இப்போது ட்ரெண்டாக காரணம் என்ன?
காதல் தோல்வி பாடலாக இது உருவாக்கப்பட்டாலும், இதற்கான வீடியோ பாடலை பார்த்த பலரும் அதை ஒரு ட்ரோல் மெட்டீரியலாக்கி சமூக வலைதளங்களில் பரவவிட்டனர். அதைத் தொடர்ந்து பலரும் இந்தப் பாடலுக்கான ரீல்ஸை பகிர்ந்தனர். இன்னும் உச்சக்கட்டமாக பாடலுக்கான தமிழ் வெர்ஷனைக் கூட உருவாக்கி அதையும் ட்ரெண்ட் செய்தனர். இப்படித்தான் சமீப நாட்களாக ட்ரென்டிங்கில் இருக்கிறது சீ சீ சீ ரே நானி.
சித்தார்த் சம்பல்பூரி என்ற யூடியூப் சேனலில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே இதன் வீடியோ பாடல் இருந்து. ஜனவரியில் இருந்து இந்தப் பாடல் ட்ரெண்டானதை உணர்ந்ததும், சித்தார்த் மியூசிக் என்ற தனது இன்னொரு யூடியூப் சேனலிலும் பதிவேற்றி லட்சக்கணக்கில் வீவ்ஸ் பார்த்திருக்கிறார்கள்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பெரிய பிரபலமல்லாத ஒரு நாட்டுப்புற பாடகர் பாடிய இப்பாடல் 30 ஆண்டுகள் கடந்து, இன்றைய இளைஞர்களை VIBE செய்ய வைக்கிறது என்றால். இது கண்டிப்பாக அந்த இசை கலைஞனுக்கான வெற்றிதான். 2012ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி சத்ய நாராயணன் அதிகாரி உடல்நலக்குறைவினால் காலமானார். ஆனால் இசையால் அவர் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்.
கிட்டத்தட்ட இம்தியாஸ் அலி இயக்கிய `சம்கீலா' படம் மூலம் எப்படி அமர் சிங் சம்கீலா என்ற மகத்தான கலைஞன் மிகப்பரவலாக அறியப்பட்டாரோ, அப்படியான ஒரு பிரபல்யத்தை `சீ சீ சீ ரே நானி' பாடல் சத்ய நாராயணன் அதிகாரிக்கு பெற்றுத் தரும் என நம்புவோம்.