இளையராஜா இசையமைத்த படம் ஆஸ்கருக்கு தேர்வு.. இந்தியா சார்பில் போட்டியிடும் ‘கோந்தல்’!
2027ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு, இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள கோந்தல் (Gondhal) திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் தவக்கர் இயக்கத்தில்,மஹாராஷ்டிராவின் பாரம்பரிய சடங்கை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம், இந்தியாவின் அதிகாரப்பூர்வ படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் சந்தோஷ் தவக்கர் இயக்கத்தில் உருவான 'கோந்தல்' மராத்தி திரைப்படம், 2027-ஆம் ஆண்டிற்கான 99-வது ஆஸ்கர் விருதின் 'சிறந்த சர்வதேசத் திரைப்படம்' (Best International Feature Film) பிரிவில் போட்டியிட இந்தியாவின் அதிகாரப்பூர்வ படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலுமிருந்து பரிசீலிக்கப்பட்ட 33 திரைப்படங்களில் இருந்து பி.சேஷாத்ரி தலைமையிலான FFI நடுவர் குழு இப்படத்தைத் தேர்வு செய்துள்ளது.
'ஸ்வாஸ்' (2005), 'ஹரிஷ்சந்திராச்சி ஃபேக்டரி' (2009) மற்றும் 'கோர்ட்' (2015) ஆகிய படங்களுக்குப் பிறகு ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்படும் 4-ஆவது மராத்தி படம் இதுவாகும். மகாராஷ்டிர கிராமப்புறங்களில் நடக்கும் 'கோந்தல்' என்ற பாரம்பரிய சடங்கு மற்றும் நாட்டுப்புறக் கலை வடிவத்தை பின்னணியாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 56-ஆவது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் (IFFI) இப்படத்தின் இயக்கத்திற்காகச் சந்தோஷ் தவக்கர் 'வெள்ளி மயில்' (Silver Peacock) விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

