இந்தியன் 2 விபத்து: கிரேன் ஆபரேட்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு
இந்தியன் 2 விபத்து தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில், நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். பிப்ரவரி 7ஆம் தேதி முதல் செம்பரம்பாக்கத்தில் உள்ள பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு இரவு பகலாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நேற்றிரவு 9 மணிக்கு படப்பிடிப்பு தளத்தில், ஸ்டுடியோ லைட் வைக்கப்பட்டிருந்த கிரேன் ஒன்று அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அப்போது கிரேனுக்கு அடியில் சிக்கிய உதவி இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர்கள் மது மற்றும் சந்திரன் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 9 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்த்திரையுலகினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து ட்வீட் செய்த கமல்ஹாசன், எத்தனையோ விபத்துகளை சந்தித்து, கடந்திருந்தாலும் இந்த விபத்து மிகக் கொடூரமானது என்றும் 3 சகாக்களை இழந்து நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ள நசரத்பேட்டை போலீசார் கிரேன் ஆபரேட்டர் ராஜன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அஜாக்கிரதையாக இருந்து மரணத்தை ஏற்படுத்துதல், உபகரணங்களை தவறாக கையாண்டு மரணத்தை விளைவித்தல் உள்ளிட்ட
3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கிரேன் ஆபரேட்டர் ராஜன் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை தேடி வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.