
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம், 'இந்தியன் 2'. இதன் ஷூட்டிங் தற்போது நடந்து வருகிறது. கமல் ஜோடியாக, காஜல் அகர்வால் நடிக்கிறார். மற்றும் ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, வித்யூத் ஜாம்வால், விவேக் உட்பட பலர் நடிக்கின்றனர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், ராஜஸ்தான் உள்ளிட்ட இந்தியாவின் சில பகுதிகளில் நடந்து வருகிறது. உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்த படக்குழு ஏற்கெனவே திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது அதில் சில குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்தியன் 2 படப்பிடிப்புக்காக சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் படப்பிடிப்பு நடத்த இயக்குநர் ஷங்கர் ஏற்கெனவே திட்டமிருந்ததாகவும் இதற்காக அவர் மார்ச்-ஏப்ரல் மாதத்தை ஒதுக்கி இருந்ததாகவும் தெரிகிறது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனா, தாய்லாந்து நாடுகள் பாதிக்கப்பட்டிருப்பதால் படப்பிடிப்புக்காக அங்கு செல்வதில் குழப்பம் உள்ளதாக தெரிகிறது.
இதனையடுத்து இத்தாலிக்கு செல்லலாம் என படக்குழு திட்டமிட்டிருப்பதால் விரைவில் வெளிநாட்டு படப்பிடிப்பு இத்தாலியில் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.