ஒளியின் மீதான ஆளுமை... திரைக்கு உயிர் கொடுக்கும் பி.சி.ஸ்ரீராமின் பிறந்ததினம் இன்று..!

ஒளியின் மீதான ஆளுமை... திரைக்கு உயிர் கொடுக்கும் பி.சி.ஸ்ரீராமின் பிறந்ததினம் இன்று..!

ஒளியின் மீதான ஆளுமை... திரைக்கு உயிர் கொடுக்கும் பி.சி.ஸ்ரீராமின் பிறந்ததினம் இன்று..!
Published on

பி.சி.ஸ்ரீராம். ஒளிக்கற்றைகளின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஓவியம் தீட்டியக் கலைஞர்களில் தவிர்க்க முடியாதவர். தான் ஒரு ஒளிப்பதிவாளராக ஆக வேண்டும் என்ற கனவோடு வரும் இளைஞர்களுக்கு தனது பெயரை தமிழ் சினிமாவில் அழுத்தமாய் பதித்த கலைசிற்பி.

பி.சி.ஸ்ரீராம் ப்ரேம்கள் என்றாலே வித்தியாசமான காட்சி வடிவமைப்பு, ஆளுமையுடன் தெளிக்கப்பட்ட வண்ணக்குழைவு என பல விஷயங்களை நாம் எடுத்து பேசினாலும் பி.சி.ஸ்ரீராமின் தனித்துவம் என்னவென்று கேட்டால் அது அவரது காட்சிகளில் அமைந்திருக்கும் ஒளிக்கலவைதான். ஆம் அவர் தேர்ந்தெடுத்து செய்த ஒவ்வொரு படங்களிலும் ஒளியின் மீதான தனது ஆளுமையை சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார் பி.சி.ஸ்ரீராம்.

1956-ஆம் ஆண்டு பிறந்த பி.சி.ஸ்ரீராம் மெட்ராஸ் திரைப்பட கல்லூரியில் ஒளிப்பதிவாளர் கலையை கற்றுத் தேர்ந்தார். கல்லூரி காலங்களில் இருந்தே ஒளியின் மீது அதீத காதல் கொண்ட பி.சி.ஸ்ரீராம் தனது ஆளுமையை புதிய கோணத்தில் வளர்த்தெடுத்தார். கல்லூரி முடித்த பின்பு சிறு சிறு படங்களில் பி.சி.ஸ்ரீராம் பணியாற்றினாலும், அவையெல்லாம் பெரிதாக கவனம் பெறவில்லை. இதனையடுத்து அவரது நண்பர் மணிரத்னம் இயக்கிய ‘மௌன ராகம்’ படத்தில் இணைந்தார் பி.சி.ஸ்ரீராம். கணவன், மனைவிக்கு இடையேயான முரண்களையும், அதன் ஊடே பின்னிப் பிணைந்திருந்த உணர்வுகளையும் தனது கேமரா காந்தத்தால் செதுக்கியிருந்தார் அவர். குறிப்பாக கார்த்திக்-ரேவதி இடையேயான காதல் காட்சிகள் இன்று வரை தமிழ் சினிமாவால் பேசப்படுகின்றன.

இதனையடுத்து மணிரத்னத்துடன் மீண்டும் ‘அக்னி நட்சத்திரம்’ படத்தில் இணைந்த பி.சி.ஸ்ரீராம் இப்படத்திலும் தனது திறமையை அபாரமாகவெளிப்படுத்தியிருந்தார். அதன் பின்னர் அவர் ஒளிப்பதிவு செய்த ‘கீதாஞ்சலி’ படமும் பி.சி.ஸ்ரீராமுக்கு பெரும் பெயரை பெற்றுத் தந்தது. அதன் பின்னர் பிரியதர்ஷன் இயக்கிய ‘கோபுர வாசலிலே’ படத்தில் பணியாற்றிய பி.சி, அடுத்ததாக கமல்-மணிரத்னம் கூட்டணியில் உருவான நாயகன் படத்தில் இணைந்தார்.

நாயகன் படம் இன்றைய தலைமுறையினரால் இன்று வரை பேசப்படுகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் பி.சி.ஸ்ரீராம். அந்த வகையில் தனது காட்சி முறைகளால் கமலின் ஆக்‌ஷன் காட்சிகளையும், சென்டிமெண்ட் காட்சிகளையும் செதுக்கியிருப்பார் பி.சி. அதன் பின்னர் பரதன் கமல் கூட்டணியில் உருவான ‘தேவர் மகன்’ படத்தில் இணைந்தார் பி.சி.ஸ்ரீராம். சிவாஜி, கமல், ரேவதி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்த இப்படம் ஒரு குறிப்பிட்ட ஜாதிக்குள் நடக்கும் வன்முறையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. அதனால் காட்சிகளுக்கு காட்சி வன்முறை என்பது கொஞ்சம் அதிகப்படியாகவே இருந்தது. அதனை தனது கச்சித திரைக்கதையால் வார்த்தெடுத்திருப்பார் கமல். அந்த திரைக்கதைக்கு உயிர் கொடுத்தது பி.சியின் கேமரா.

குறிப்பாக கமலுக்கும் சிவாஜிக்கும் இடையேயான காட்சிகள், கமல் சிவாஜியாக மாறும் காட்சி, இறுதியில் நாசருக்கும் கமலுக்கும் இடையேயான சண்டை காட்சி என அத்தனையிலும் தனது அபார பங்கை கொடுத்திருப்பார் பி.சி.ஸ்ரீராம். அதேபோல் கமல் நடித்திருந்த ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்திலும் பி.சி என்ற கலைஞனின் பங்கு அபாரமாக அமைந்திருந்தது. குறிப்பாக குள்ளன் கதாப்பாத்திரத்தை திரையில் தத்ரூபமாக கொண்டுவர இவர் எடுத்த சிரத்தை இன்னும் தமிழ் சினிமாவால் ஆச்சர்யப்பட்டு பார்க்கப்படுகிறது என்றால் அது மறுக்க முடியாத உண்மை.

விக்ரமின் மீரா படத்தில் இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார் பி.சி.ஸ்ரீராம். ஆனால் இந்தப் படம் வியாபார ரீதியாக சரியாக போகாத நிலையில் மீண்டும் மணிரத்னத்துடன் ‘திருடா திருடா’ படத்தில் இணைந்தார் பி.சி.ஸ்ரீராம். திருடர்களின் கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்ட இந்தக் கதைக்கரு, விறுவிறுப்பான காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. அந்தக் கருவிற்கு ஏற்றப்படி இவர் காட்சிப்படுத்தியிருந்த தனது கேமரா கோணங்கள், ரசிகர்களை ஒன்ற வைத்தது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்றிருந்த சந்திரலேகா பாடலில் இவர் செய்திருந்த மாயாஜாலங்கள் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் பின்னர் கமல் அர்ஜூன் கூட்டணியில் உருவான ‘குருதிப்புனல்’ படத்தை இயக்கியிருந்தார். இப்படம் இன்று வரை தமிழ் சினிமாவிற்கு வரும் இயக்குநர்களுக்கு பெரும் பாடமாக இருந்து வருகிறது.

இது மட்டுமல்லாமல் இப்படம் ஆஸ்கார் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் நாமினேட் ஆகவில்லை. அதன் பின்னர் ஒளிப்பதிவாளராக பலப்படங்களில் பணியாற்றிய பி.சி.ஸ்ரீராமுக்கு மாதவன் - மணிரத்னம் கூட்டணியில் உருவான ‘அலைபாயுதே’ படம் பெரும் கவனத்தை பெற்றுத் தந்தது. குறிப்பாக படத்தில் இடம் பெற்றிருந்த ரயில் காட்சிகள், பச்சை நிறமே பாடலில் இவர் காட்டியிருந்த ஒளிக்கலவை என அனைத்தும் அடுத்த தலைமுறைக்கான பாடத்தை கற்றுத்தந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

அதன் பின்னர் விஜயுடன் குஷி, அஜித்துடன் முகவரி, வரலாறு என பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பி.சி.ஸ்ரீராம் அதன் பின்னர் தனது ஒளிக்கலைக்கு சிறிது இடைவேளைக் கொடுத்து மீண்டும் ரெமோ, ஐ, ஓகே கண்மணி ஆகிய படங்களில் பணியாற்றி இன்றைய தலைமுறையினருக்கும் சிம்மசொப்பனமாய் இருந்து வருகிறார்.

இதுமட்டுமல்லாமல் இந்தியில் பேட்மேன், ஷமிதாப், கி கா போன்ற படங்களில் பணியாற்றி பாலிவுட்டிலும் தனது தடத்தை பதித்து வருகிறார். இதுமட்டுமா தனது கலையை அடுத்த தலைமுறைக்கு தகுந்த நபர்களிடம் ஒப்படைப்பதிலும் அந்த மவுன கலைஞருக்கு நிகர் அவர் மட்டுமே. ஆம், ஜீவா திரு, கே.வி.ஆனந்த் உள்ளிட்ட பல ஒளிப்பதிவாளர்களை தமிழ் சினிமாவிற்கு தந்து அடுத்த தலைமுறைக்கான விதைகளையும் விதைத்திருக்கிறார் பி.சி.ஸ்ரீராம் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லி வாழ்த்துகிறது புதிய தலைமுறை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com