நடிகர் விஜய் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலி என்.எல்.சி.யில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக படப்பிடிப்பிலிருந்த விஜய்யை, வருமான வரித்துறையினர் சென்னை அழைத்து வந்து விசாரித்தனர். மேலும் விஜய் வீட்டிலும் வருமான வரித்துறையின் சோதனை நடைபெற்றது. ஆனால் அவர் வீட்டிலிருந்து ஏதேனும் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்த விவரங்களை வருமான வரித்துறை வெளியிடவில்லை. பின்னர் வருமான வரித்துறை சோதனை முடிவடைந்த நிலையில், ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் விஜய் மீண்டும் கலந்து கொண்டார்.
இந்நிலையில் நடிகர் விஜய் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னதாக வருமான வரித்துறையினரின் சோதனைக்கு பின் நெய்வேலி என்எல்சியில் நடைபெற்ற படப்பிடிப்பில் விஜய் பங்கேற்றார். அப்போது அவரை நேரில் காண ஏராளமான ரசிகர்கள் கூடினர். இதனையடுத்து படப்பிடிப்பிலிருந்து வெளியே வந்த விஜய், வேனில் மீது ஏறி ரசிகர்களை பார்த்து கையசைத்தார். மேலும் தன் பாக்கெட்டில் இருந்து செல்போனை எடுத்து செல்ஃபியும் எடுத்தார். விஜய் செல்ஃபி எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.