வருமானவரி சோதனையில் சிக்கும் திரை நட்சத்திரங்கள் - ப்ளாஷ்பேக் ரிப்போர்ட்

வருமானவரி சோதனையில் சிக்கும் திரை நட்சத்திரங்கள் - ப்ளாஷ்பேக் ரிப்போர்ட்

வருமானவரி சோதனையில் சிக்கும் திரை நட்சத்திரங்கள் - ப்ளாஷ்பேக் ரிப்போர்ட்
Published on

கடந்த சில ஆண்டுகளில் வருமானவரித்துறை சோதனையில் சிக்கிய நடிகர்கள் மற்றும் நடிகைகள் யார்? யார்? என்பது குறித்த விவரங்கள் கிடைத்துள்ளன.

வருமான வரித்துறையினர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் விஜய்க்கு சொந்தமான வீடுகளில் சோதனை நடத்தினர். இரண்டு நாட்கள் நடந்த இந்தச் சோதனையின் இறுதியில் விதிமுறைகளுக்குப் புறம்பாக எந்தத் தொகையும் கைப்பற்றப்படவில்லை என்ற அறிவிப்பு வெளியானது. இருப்பினும் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட இந்தச் சோதனைக்கு அரசியல் கட்சிகள் சார்பில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் வருமான வரி சோதனையில் இதற்கு முன் சிக்கிய சில நடிகர்கள் மற்றும் நடிகைகள் யார்? என ஒரு பருந்து பார்வையில் பட்டியலைத் தயாரித்தோம்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ‘புலி’ படம் வெளியானபோது விஜய் வீட்டில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர் அப்படத்தை தயாரித்த பி.டி.செல்வகுமார் வீட்டிலும் சோதனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து விஜயின் ‘தெறி’ படத்தை தயாரித்த கலைப்புலி தாணு வீட்டிலும் சோதனை நடத்தினர். அதே ஆண்டில் நடிகைகள் சமந்தா மற்றும் நயன்தாரா வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

அதேபோல் கடந்த 2007 ஆம் ஆண்டு ‘பில்லா’ படம் வெளியானபோது திருவான்மியூரிலுள்ள நடிகர் அஜித் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் அஜித்திடமிருந்து விதிகளுக்கு மீறி சேர்க்கப்பட்ட தொகை கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இதனைத் தொடந்து அவர் இரண்டு நாட்கள் பிரபல ஹோட்டலில் தங்கி இருந்ததாகவும் சொல்லப்பட்டது.

கடந்த 2013 ஆம் ஆண்டு ‘சண்டைக்கோழி’,‘அஞ்சான்’ படங்களை இயக்கிய இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்பட்டது. மேலும் கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் சந்தானம் மற்றும் பிரபல தயாரிப்பாளர்கள் ஏ.எம்.ரத்னம், ஞானவேல்ராஜா ஆகியோர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதிலும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்பட்டது.

தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதிக்குச் சொந்தமான வீடு மற்றும் அலுவலங்களில் கடந்த 2018 ஆம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாக தகவல் வெளியானது. இதற்குப் பதிலளித்த விஜய்சேதுபதி அது வருமான வரிசோதனை இல்லை என்றும் அது ஜிஎஸ்டி தொடர்பான ஆய்வு என்றும் விளக்கமளித்தார்.

பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகன் நடிகர் ராணா. இவர் ‘பாகுபலி’ படம் மூலம் பிரபலமடைந்தார். கடந்த ஆண்டு சுரேஷ் பாபு வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்த நிலையில், ராணா வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அதேபோல கடந்த மாதம் குடகு மாவட்டம் ‘விராஜ்பேட்’டில் உள்ள ‘கீதா கோவிந்தம்’ பட நாயகியான ரஷ்மிகா மந்தனாவின் வீட்டில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com