விஜய் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு
நடிகர் விஜய் வீட்டில் நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது.
‘பிகில்’ படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனையை தொடங்கியது. அதேபோல், படம் தயாரிக்க கடன் கொடுத்த பைனான்சியர் அன்புச்செழியன் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடைபெறுகிறது.
இதைத்தொடர்ந்து நெய்வேலியில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யிடம் விசாரணையை தொடங்கினர் வருமான வரித்துறையினர். பின்னர் அங்கிருந்து அவரது காரிலேயே சென்னை அழைத்து வந்து, இரவு முழுவதும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இன்றும் சோதனை தொடர்ந்து நடைபெற்றது.
விஜய் வீட்டில் கடந்த 23 மணிநேரம் நடைபெற்ற சோதனை தற்போது நிறைவு பெற்றுள்ளது. அங்கிருந்து பணம் எதுவும் கைப்பற்றப்பட்டதா, ஆவணங்கள் எதுவும் சிக்கியதா என்பது குறித்து எந்த தகவலையும் வருமான வரித்துறை வெளியிடவில்லை.
முன்னதாக அன்புச்செழியன் வீட்டில் சோதனையிட்டபோது கணக்கில் வராத 77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறைஅறிவித்தது குறிப்பிடத்தக்கது.