''சிம்பொனியை எழுதுவதற்கு என் வாழ்க்கை முழுவதும் சென்றது'' - இளையராஜா
”சிம்பொனியை எழுதுவதற்கு என் வாழ்க்கை முழுவதும் சென்றது” என இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.
சிம்பனி சிகரம் தொட்ட தமிழர் இளையராஜா, இசை உலகில் 50 ஆண்டுகளை கடந்ததையொட்டி, தமிழக அரசு சார்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடைபெற்றது. சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் அமைச்சர்களும், திரைப் பிரபலங்களும் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் பேசிய இளையராஜா, “கலைஞரின் தவப்புதல்வர் எனக்குப் பாராட்டு விழா நடத்துகிறார். அரசு சார்பில் இசைக் கலைஞருக்கு பாராட்டு விழா நடந்ததில்லை. இசையுலக சரித்திரத்தில் இதைப் பெரிய விஷயமாக கருதுகிறேன். என்னை வழியனுப்பி, வரவேற்று, இன்று பாராட்டு விழாவும் நடத்தியுள்ளது இந்த அரசு. என்னால் இப்போதும் இது எதையும் நம்ப முடியவில்லை. அதற்கு இசைதான் காரணம் என நினைக்கிறேன். அதுபோல் நீங்கள் விரும்பிக் கேட்ட அத்தனை பாடல்களையும் கம்போஸ் செய்திருக்க முடியாது. சிம்பொனியை எழுதுவதற்கு என் வாழ்க்கை முழுவதும் சென்றது. சிம்பொனி இசையை மக்கள் அனைவரும் கேட்க வேண்டும். பெரிய மைதானத்தில் இதே கலைஞர்களைக் கொண்டு நான் நிகழ்ச்சி நடத்துவேன். அதற்குத் தேவையான உதவியை, என்மீது கொண்ட அன்பின்பேரில் முதலமைச்சர் செய்வார் என நம்புகிறேன்” எனக் கோரிக்கை வைத்தார்.