EXCLUSIVE | “மஞ்ஞுமல் பாய்ஸ் குழுவினர் நன்றி கூட தெரிவிக்கவில்லை”- இளையராஜா தரப்பு வழக்கறிஞர் பேட்டி
செய்தியாளர்- விக்னேஷ்முத்து.
மலையாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான மஞ்ஞுமல் பாய்ஸ் படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. ரூ. 200 கோடி வசூலை வாரிக்குவித்த இப்படத்தில் "கண்மணி அன்போடு காதலன், நான் எழுதும் கடிதமே" என்ற குணா படத்தின் பாடல் மிக முக்கியமானதொரு காட்சியில் இடம் பெற்றிருந்தது.
இளையராஜா தரப்பு நோட்டீஸ்
இந்நிலையில், நேற்று இளையராஜா தரப்பு வழக்கறிஞர் படக்குழுவுக்கு நோட்டீஸ் ஒன்று அனுப்பியுள்ளார். அதில்,
“அனுமதியின்றி இளையராஜாவின் குணா படப் பாடலை படக்குழு பயன்படுத்தி உள்ளது. பாடலின் உரிமையாளர் என்பதால், எங்களிடம் முறையாக அனுமதி பெற்று பாடலை பயன்படுத்தி இருக்கவேண்டும். அதை செய்யாமல் பாடலை பயன்படுத்தியதற்காக எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும். இழப்பீடு தராவிட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்”
என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் “இசையை பொருத்தமட்டில் அதனை உருவாக்கும் கர்த்தாவுக்குதான் அது சொந்தம் என நமது காப்புரிமை சட்டம் தெளிவாக சொல்லியிருக்கிறது; மஞ்ஞுமல் பாய்ஸ் தயாரிப்பு நிறுவனம் தங்களது படத்தில் கண்மணி அன்போடு என்ற பாடலை முறையான அனுமதி இன்றி பயன்படுத்தி இருக்கிறார்கள்” என்று இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சரவணன் புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டி அளித்திருக்கிறார்.
வழக்கறிஞர் பிரத்யேக பேட்டி
அவர் நமக்கு அளித்த பேட்டியில், “கண்மணி அன்போடு காதலன் என்ற அந்தப்பாடல் இளையராஜா அவர்களின் சூப்பர் ஹிட் பாடல் என்பது நம் எல்லாருக்குமே தெரியும். இந்தப்பாடல் எப்படி உருவானது என்பதையும் பார்த்திருப்பீர்கள். கமல்ஹாசன், கங்கை அமரன், இளையராஜா ஆகியோர் சேர்ந்து வேலை செய்த வீடியோகூட சமீபத்தில் பரவலாக வைரலானது. இசையை பொருத்தமட்டில் அதனை உருவாக்கும் கர்த்தாவுக்குதான் அது சொந்தம் என நமது காப்புரிமை சட்டம் தெளிவாக சொல்லியிருக்கிறது.
‘தயாரிப்பாளர்தான் அந்தப் படத்தில் பணம் கொடுத்து பாடலை இசைக்க சொல்லி இருக்கிறார்’ என சிலர் கேட்கலாம். இதைக் குறிப்பிட்டு, ‘பாடலின் உரிமை தயாரிப்பாளருக்குதான் சொந்தம்’ என சிலர் கேட்கலாம். தயாரிப்பாளரை பொருத்தமட்டில் அந்த பாடலை படம் கொடுத்து அந்தப் படத்திற்கு பயன்படுத்துகிறார்.
தயாரிப்பாளர் பணம் கொடுத்து அந்தப் படத்திற்கு அப்பாடலை வாங்கி விட்டார் என்பதற்காக அந்த பாடலின் இசை தயாரிப்பாளருக்கு சொந்தமில்லை. இதைத்தான் நமது காப்புரிமை சட்டம் தெளிவாக சொல்கிறது.
இளையராஜா தரப்பு வழக்கறிஞர்
இந்தப் பாடல்களை யாராவது பயன்படுத்தலாம் என தெரிவித்தால் பயன்படுத்தலாம். ஆனால் வணிக ரீதியாக பயன்படுத்துவதற்கு அனுமதி இல்லை. உதாரணமாக திருமண மண்டபங்களில் பாடல் பாடுகிறார்கள்... அதற்கு பயன்படுத்தலாம். ஆனால் வணிக ரீதியாக இதனை பயன்படுத்த முடியாது. ஒரு படத்தில் ஒருவரது பாடலை பயன்படுத்தும் பொழுது அவரிடம் முறையாக அனுமதி பெற வேண்டும்.
மஞ்ஞுமல் பாய்ஸ் தயாரிப்பு நிறுவனம் தங்களது படத்தில் கண்மணி அன்போடு என்ற பாடலை முறையான அனுமதி இன்றி பயன்படுத்தி இருக்கிறார்கள். பாடலை பயன்படுத்தியதற்கு நன்றி கூட தெரிவிக்கவில்லை. பயன்படுத்திய பிறகு இது தொடர்பாக எங்களை வந்து சந்திப்பார்கள் என நினைத்தோம். ஆனால் சந்திக்கவில்லை.
சமீபத்தில் இந்த படத்தின் வெற்றி கொண்டாட்டம் நடைபெற்ற போது அந்த படக்குழுவைச் சேர்ந்தவர்கள் ‘நமது பாடல் எல்லா சமூக வலைத்தளங்களிலும் அதிகமாக சென்று கொண்டிருக்கிறது’ என தெரிவித்ததை பார்க்க முடிந்தது.
தமிழகத்தை பொறுத்தமட்டில் காப்புரிமையை நிலைநாட்ட இசைஞானி இளையராஜா தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்து வருகிறார். இது அனைவருக்குமான முன்னெடுப்பாக இருக்கும். இவ்விஷயத்தை பொறுத்தவரை எப்போது நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்பது இங்கு முக்கியம் இல்லை. படைப்பாளியின் உரிமையை அவர்கள் அங்கீகரித்து இருக்கிறார்களா இல்லையா என்பதுதான் முக்கியம். படைப்பாளி தனக்கான அங்கீகாரத்தை காப்பாற்ற அனைவரும் முன்வரவேண்டும். இந்த நோட்டீஸிற்கு இதுவரை மஞ்ஞுமல் பாய்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் பதில் எதுவும் வரவில்லை” என்றார்.