“எனது பாடல்களை பயன்படுத்த தடை செல்லும்” - இளையராஜா விளக்கம்

“எனது பாடல்களை பயன்படுத்த தடை செல்லும்” - இளையராஜா விளக்கம்
“எனது பாடல்களை பயன்படுத்த தடை செல்லும்” - இளையராஜா விளக்கம்

தனது பாடல்களை பயன்படுத்த நீதிமன்றம் பிறப்பித்த தடை செல்லும் என்றும், அந்தத் தீர்ப்பில் எந்த மாற்றமும் இல்லை என்றும் இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டத்துக்குப் புறம்பாக தனது பாடல்களை விற்பனை செய்வதாக 2010ஆம் ஆண்டு எக்கோ நிறுவனத்தின் மீதும், அதன் உரிமையாளர் மீதும் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பே நேற்று வெளியானதாக விளக்கம் அளித்துள்ளார். அந்தத் தீர்ப்பின்படி, எக்கோ நிறுவனத்தின் மீதான குற்றவியல் நடவடிக்கையை மட்டுமே நீதிபதி ரத்து செய்துள்ளார் என்றும், அதில் தனது காப்புரிமை செல்லாது என்று அறிவிக்கவில்லை என்றும் இளையராஜா தெரிவித்துள்ளார். 

இந்த வழக்குக்கும், பாடல்களின் உரிமை மீது 2014ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளிவரும் முன்னுக்குப்பின் முரணான செய்திகளில் உண்மை இல்லை என்று இளையராஜா தெரிவித்துள்ளார். 4 ஆண்டுகள் வழக்கு நடத்தி இறுதித் தீர்ப்புக்காக காத்திருக்கும் நேரத்தில், தவறான தகவல்கள் வெளியாவதாகவும் அவற்றில் உண்மையில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, தனது பாடல்களை காப்புரிமை பெறாமல் பயன்படுத்தியதாக எக்கோ உள்ளிட்ட சில இசை நிறுவனங்கள் மீது கடந்த 2010ஆம் ஆண்டில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் இசையமைப்பாளர் இளையராஜா புகார் செய்திருந்தார். இந்தப்புகாரின் மீது காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை எதிர்த்து எக்கோ நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை நேற்று விசாரித்து உயர்நீதிமன்றம்,  “இந்தப் பிரச்சினை ஒரு சிவில் பிரச்சினை என்பதனால் கிரிமினல் புகார் அளிக்க முடியாது” என்று கூறி இளையராஜா அளித்த புகாரை தள்ளுபடி செய்தது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com