\
“லாரன்ஸ் படத்தில் எனக்கு வாய்ப்பு” - ஸ்ரீரெட்டி குஷி

“லாரன்ஸ் படத்தில் எனக்கு வாய்ப்பு” - ஸ்ரீரெட்டி குஷி

“லாரன்ஸ் படத்தில் எனக்கு வாய்ப்பு” - ஸ்ரீரெட்டி குஷி
Published on

நடிகர் லாரன்ஸின் அடுத்த திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார். 

பட வாய்ப்பு தருவதாகக் கூறி தெலுங்கு திரையுலகினர் தன்னை பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக்கொண்டனர் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. தெலுங்கு திரையுலகினர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கிய அவர் அடுத்து தமிழ்த்திரையுலகினர் மீதும், பாலியல் புகார்களை கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், சுந்தர்.சி உட்பட பலர் மீது பரப்பரப்பு புகார் கூறினார். அந்த வரிசையில் நடிகர் ராகவா லாரன்ஸ் மீதும் புகார் கூறினார். 

புகார் குறித்து பதில் அளித்த நடிகர் லாரன்ஸ், நான் எந்தத் தவறும் செய்யவில்லை. யாரைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை. என் மீது அபாண்டமாகப் பழி சுமத்தும் ஸ்ரீரெட்டி உண்மையிலேயே சினிமா வாய்ப்புக்காக இதைச் செய்கிறார் என்றால் ஒரு முறை நடித்துக் காட்ட வேண்டும். அவரது நடிப்பு பிடித்திருந்தால் அந்த நேரத்திலேயே வாய்ப்பு தருவதாகவும் கூறினார். இதற்கு பதிலளித்த ஸ்ரீரெட்டி அவரின் சவாலை ஏற்பதாகவும் தெரிவித்தார். 

இந்நிலையில் லாரன்ஸை அவரது இல்லத்தில் சந்தித்து நடித்துக் காட்டியதாகவும், அது அவருக்கும் பிடித்துவிட்டதால் அடுத்தப் படத்தில் வாய்ப்பு வழங்குவதாக உறுதி செய்திருக்கிறார் எனவும் ஸ்ரீரெட்டி அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அந்தப் படத்தில் நடிப்பதற்கான முன் பணத்தை பெற்று விட்டதாகவும் ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com