"சர்வம் மாயா நடிக்கும் முன் `Just like Heaven' பார்த்தேன்" - Delulu ரியா ஷிபு | Sarvam Maya
நிவின் பாலி, ரியா ஷிபு நடிப்பில் அகில் சத்யன் இயக்கி கடந்த ஆண்டு இறுதியில் வெளியான படம் `சர்வம் மாயா'. திரையரங்கில் பெரிய வரவேற்பைப் பெற்ற இப்படம், ஓடிடியில் வெளியாகியுள்ள பரவலான பாராட்டுகளைப் பெற்றது. இப்படம் வெளியான சமயத்தில் இது ஹாலிவுட்டில் வெளியான `Just like Heaven' படத்தின் காப்பி என சிலர் விமர்சித்தனர்.
இப்படத்தில் Delulu பாத்திரத்தில் நடித்த ரியா ஷிபு தற்போது அளித்த பேட்டி ஒன்றில், இப்படத்தில் நடிக்க தயாரானபோது `Just like Heaven' படம் பார்த்ததாகவும் கூறியுள்ளார். ரியா இதுபற்றி கூறுகையில், "அகில் இந்தக் கதையை என்னிடம் சொன்னபோது உயிரோடு இருப்பவர்களைவிட உற்சாகமாக இருக்கும் ஒரு கோஸ்ட் நீ என்றுதான் விவரித்தார். இதைப் பற்றி என் அம்மாவிடம் கூறினேன். அவர் Vismayathumbathu படமும் இதே பாணியில் இருக்கும் எனக் கூறி அதனைப் பார்க்க வைத்தார். அதில் மோகன்லால் சார், முகேஷ் சார், நயன்தாரா மேடம் எல்லோரும் நடித்திருப்பார்கள். அதுவும் இதைப்போல (சர்வம் மாயா) ஒரு கதையாகத்தான் இருக்கும். ஆனால் பல விஷயங்கள் வேறாக இருக்கும். எனக்கு அந்தப் படம் மிகவும் பிடித்தது. எனவே அதைப்போல ஒரு படத்தில் நடிக்கப் போகிறோம் என உற்சாகமாக இருந்தது.
பின்னர் `Just like Heaven' படமும் பார்த்தேன். அதில் Reese Witherspoon கோஸ்ட்டாக நடித்திருப்பார். அவர் ஒரு மருத்துவராக இருப்பார், அதை மையப்படுத்தி சில காட்சிகள் அப்படத்தில் நடித்திருப்பார். அப்போது என்னிடம் `சர்வம் மாயா' படத்தின் கதை கொடுக்கப்படவில்லை. ஆனாலும் அதற்குமுன் இந்தப் படங்களை எல்லாம் பார்த்து தயார்படுத்திக் கொண்டேன்.
பின்னர் அந்தக் கதை கொடுக்கப்பட்டதும், அது முற்றிலும் வேறு ஒன்றாக இருந்தது. கதாபாத்திரங்களுக்கு இடையேயான பிணைப்பு மிக இயற்கையாக நடப்பதுபோல இருந்தது" என்றார். `சர்வம் மாயா' இந்தப் படத்தின் காப்பி எனச் சொல்லப்படும் நிலையில், அதே படத்தை பார்த்துதான் ரியா நடிக்க தயாரானதாக சொல்லி இருக்கிறார் என்பது சுவாரஸ்யமான பேசுபொருளாகி இருக்கிறது.

