"விஜய் 65-ல் நான் இல்லை; ஆனால்..." - நடிகர் வித்யூத் ஜம்வால் விளக்கம்
’விஜய் 65’ படத்தில் வித்யூத் ஜம்வால் நடிக்கிறார் என்று தகவல் பரவிவந்த நிலையில் விளக்கம் அளித்துள்ளார் வித்யூத்.
’மாஸ்டர்’ பட வெற்றிக்குப் பிறகு நடிகர் விஜய், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘விஜய் 65’ படத்தில் நடிக்கிறார். பூஜா ஹெக்டே, விஜய்க்கு ஜோடியாக நடிக்க அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில், கடந்த 2012-ஆம் ஆண்டு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் ஹீரோவாகவும் பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வால் வில்லனாகவும் நடித்த ‘துப்பாக்கி’ படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதில், வில்லனாக நடித்த வித்யூத் ஜம்வாலின் மிரட்டலான நடிப்பு கவனம் ஈர்த்தது. அவருடன் விஜய் பேசும் ’ஐ ஆம் வெய்ட்டிங்’ வசனம் இப்போதுவரை படங்களிலும் மீம்ஸ்களிலும் இடம்பெற்று வருகின்றன.
விஜய்-வித்யூத் ஜம்வால் கூட்டணி ’துப்பாக்கி’ படத்திற்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளது என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்த நிலையில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வித்யூத் ஜம்வால் விளக்கம் அளித்துள்ளார். அதில்,”விஜய்யுடன் இணைய ஐ ஆம் வெய்ட்டிங். அவர் படத்தில் நடிக்க விரும்புகிறேன். ஆனால், ’விஜய் 65’ படத்தில் நான் நடிக்கிறேன் என்பது வதந்தி” என்று குறிப்பிட்டுள்ளார்.