தனுஷ் படத்துக்கு என்னிடம் பேசவில்லை: ஹிர்த்திக் ரோஷன்
தனுஷூடன் நடிக்கும் படத்துக்கு தன்னிடம் யாரும் பேசவில்லை என்று பிரபல இந்தி நடிகர் ஹிர்த்திக் ரோஷன் தெரிவித்துள்ளார்.
இந்தியில், ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ராஞ்ஜனா (Raanjhanaa) என்ற படத்தில் நடித்திருந்தார் தனுஷ். அவர் ஜோடியாக சோனம் கபூர் நடித்திருந்தார். கவனிக்கப்பட்ட இந்தப் படம், தனுஷூக்கு இந்தியிலும் பெயர் வாங்கித் தந்தது. இதையடுத்து பால்கி இயக்கத்தில் அமிதாப்பச்சனுடன் ’ஷமிதாப்’ என்ற இந்திப் படத்தில் வாய் பேச முடியாதவராக நடித்தார். இந்தப் படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படங்களுக்குப் பிறகு அவர் இந்தியில் நடிக்கவில்லை. தமிழிலேயே கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில், அவர் மீண்டும் இந்திப் படத்தில் நடிக்கிறார்.
இதை ’ராஞ்ஜனா’ ஆனந்த்.எல்.ராய் இயக்குகிறார். இதில் தனுஷூடன் ஹிர்த்திக் ரோஷன் மற்றொரு ஹீரோவாக நடிக்கிறார் என்றும் ஹீரோயினாக சாரா அலிகான் நடிக்கிறார் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், இந்தப் படத்தில் நடிக்க யாரும் தன்னை தொடர்பு கொள்ளவில்லை என்று நடிகர் ஹிர்த்திக் ரோஷன் தெரிவித்துள்ளார். ’’ஆனந்த் எல்.ராய், சிறந்த இயக்குனர். இதுவரை அவர் படத்தில் நடிப்பது பற்றி யாரும் பேசவில்லை. பேசினால் அவர் படத்தில் நடிப்பது பற்றி யோசிப்பேன்’’ என்று கூறியுள்ளார்.