”தடைகள் பல கடந்துதான் கனா கண்டேன் படத்தில் கே.வி. ஆனந்துடன் இணைந்தேன் - நடிகர் ஸ்ரீகாந்த்

”தடைகள் பல கடந்துதான் கனா கண்டேன் படத்தில் கே.வி. ஆனந்துடன் இணைந்தேன் - நடிகர் ஸ்ரீகாந்த்
”தடைகள் பல கடந்துதான் கனா கண்டேன் படத்தில் கே.வி. ஆனந்துடன் இணைந்தேன் - நடிகர் ஸ்ரீகாந்த்

கே.வி.ஆன்ந்த் இன்று காலமானதை தொடர்ந்து அவர் இயக்குநராக அறிமுகமான முதல் படத்தில் கதாநாயகனாக பணியாற்றிய ஸ்ரீகாந்த் அவருடனான அனுபவங்களை புதியதலைமுறையிடம் பகிர்ந்து கொண்டார். 

இது குறித்து அவர் கூறும் போது, “அவரது இயக்கிய முதல் படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பல தடைகளை கடந்துதான் நாங்கள் “கனா கண்டேன்” படத்தில் இணைந்தோம். ‘கனா கண்டேன்’ படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடத்தவில்லை என்று அவருக்கு ஒரு வருத்தம் இருந்தது.

அந்த வருத்தத்தைப் போக்க சூர்யா மற்றும் பி.சி.ஸ்ரீராம் ஆகியோரை வரவழைத்து ஒரு சிறிய விழா ஒன்றை நடத்தினேன். அதில் பிசி ஸ்ரீராம் கே.வி.ஆனந்திற்கு விருது வழங்கினார். ’கனா கண்டேன்’ படத்தில் பாடல்களுக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு இருந்த போதும் அவர் தனது முதல்படத்தை தமிழ்நாட்டிலேயே அதுவும் சென்னையிலே எடுத்துக்காட்டுகிறேன் என்று சவாலாக எடுத்துக்காட்டினார். அவர் அர்ப்பணிப்போடு உழைக்கக்கூடியவர்.அனைவரிடமும் சகஜமாக பழகக்கூடியவர். அவர் இருக்கும் இடத்திற்கு கேரவன் உள்ளிட்ட வசதிகளை தாரளமாக பயன்படுத்தலாம். ஆனால் அவர் மொட்டை வெயிலில் நின்று கொண்டுதான் சாப்பிடுவார்.  வேலையின் காரணமாக அவர் நடந்துகொள்ளும் விதம் நமக்கு அவரை ஒரு முன்கோபகாரர் போல காட்டும். ஆனால் மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர்.

அவர் இயக்குநராக பணியாற்றிக்கொண்டிந்த போது ஒரு முறை நான் அவரிடம் நீங்கள் இனி ஒளிப்பதிவாளராக பணியாற்றுவீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர் ‘ஒருவர் இரு தளங்களில் கால் வைக்கக்கூடாது, நான் இயக்குநராகவே இருப்பேன்’ என்றார்.

முன்னதாக, அயன், மாற்றான், கவண், காப்பான், கோ, அநேகன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கிய 54 வயதான கே.வி. ஆனந்த், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதிகாலை 3 மணிக்கு காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா தொற்று இருந்ததால் அவரது உடல் நேரடியாக பெசண்ட்  நகர் மின்மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com