’கடைக்காரரிடம் நான் விக்ரம் மகன் என்றேன்!..’ - துருவ் சொன்ன குட்டி ஸ்டோரி | Bison | Dhruv | Vikram
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ், பசுபதி, லால், அமீர், அனுபமா, ரஜிஷா ஆகியோர் நடித்து வெளியான படம் `பைசன்'. இப்படத்திற்கு பரவலான பாராட்டுகளும், வரவேற்பும் கிடைத்து வருகிறது. இப்படத்தின் தெலுங்குப் பாதிப்பு அக்டோபர் 24ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் புரமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர்கள் துருவ், அனுபமா, இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் துருவ் பேசிய போது "நான் ஹைதராபாத்தில் புரமோட் செய்யும் முதல் படம் இது. எனவே எனக்கு இது மிக மிக ஸ்பெஷல். சமீபத்தில் இங்கு சூட்கேஸ் வாங்க ஒரு மாலுக்கு சென்றேன். கடைக்காரரோடு பேரம் பேசும் போது வெளியே இருந்து சிலர் எனக்கு கை காண்பித்தார்கள். அவர்கள் உங்கள் நண்பர்களா என கடைக்காரர் கேட்டார், இல்லை என்றதும் நீங்கள் நடிகரா என கேட்டார், ஆம் என்றேன். உடனே தாடியுடன் இருந்த என்னை உற்றுப் பார்த்து நீங்கள் நடிகர் விக்ரம் போல இருக்கிறீர்கள் என்றார். நான் அவருடைய மகன் எனக் கூறியதும், நான் அவரது ரசிகர் எனக் கூறினார். எந்த பின்னணியும் இல்லாமல் எல்லைகளைக் கடந்து பலரையும் கவர்ந்து என் அப்பா அன்பை சம்பாதித்துள்ளார் என்பதில் ஒரு மகனாக மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்.
அவருடைய மகனாக இருப்பதால் எல்லாமும் சுலபமாக கிடைக்கும் என எனக்குத் தெரியும். நான் இன்னும் எதுவும் சாதிக்கவில்லை, ஆனால் உங்கள் அன்பையும், மரியாதையையும் பெற கடினமாக உழைப்பேன். தெலுங்கு மக்கள் உணவையும், சினிமாவையும் எப்படி கொண்டாடுவார்கள் என எனக்குத் தெரியும். எனக்கு தெலுங்கில் பணியாற்ற வேண்டும் என்பது ஆசை. அதற்கான முதல் அடியாக இது (பைசன்) இருக்கும் என நினைக்கிறேன். பைசன் என் வாழ்க்கையில் முக்கியமான சினிமா. இதை எல்லாம் பேச நான் மூன்று ஆண்டுகள் காத்திருந்தேன்.
இப்படத்திற்காக நான் கபடி கற்றேன். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து இப்படத்தை பாருங்கள். பிடித்தால் ஆதரவு தாருங்கள். அது எனக்கு பலம் தரும். அப்பாவை போல கடுமையாக உழைப்பேன். எதிர்காலத்தில் எனக்கு ஒரு மகன் பிறந்து, சூட்கேஸுக்காக பேரம் பேசும் போது, உன் தந்தை துருவ் என்றால் மிகவும் பிடிக்கும் எனக் கடைக்காரர் சொல்ல வேண்டும் என்பதே என் விருப்பம்." எனக் கூறினார்.