தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு: நன்றி தெரிவித்து ரஜினி உருக்கமாக அறிக்கை
தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ரஜினிகாந்த் உலகெங்கிலும் உள்ள தனது ரசிகர்களுக்கு இந்த விருதை சமர்பிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ தாதா சாகேப் பால்கே விருதை எனக்கு வழங்கிய மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு நன்றி. என்னில் இருந்த நடிப்புத் திறமையை கண்டறிந்து என்னை ஊக்குவித்த என்னுடைய பேருந்து ஓட்டுநரான நண்பன் ராஜ் பகதூருக்கும் , வறுமையில் வாடும் போது என்னை நடிகனாக்க பல தியாகங்கள் செய்த என் அண்ணன் சத்யநாராயணா ராவ் கெய்க்வாட்க்கும், என்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தி, இந்த ரஜினிகாந்தை உருவாக்கிய எனது குருநாதர் பாலச்சந்தர் அவர்களுக்கும், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழிட்நுட்ப கலைஞர்கள், விநியோஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், ஊடகங்கள், எனது ரசிகர்கள் உள்ளிட்டோருக்கு இந்த விருதை சமர்பிக்கிறேன்.
அதே போல என்னை வாழ்த்திய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், எதிர்கட்சி தலைவர் நண்பர் ஸ்டாலின், நண்பர் கமல்ஹாசன், திரையுலக விரும்பிகள் உள்ளிட்டோருக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக தமிழ் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பல படங்களில் சிறப்பான பங்களிப்பை அளித்தமைக்காக 51வது தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுவதாகவும், இந்த விருதிற்கும் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
தாதா சாகேப் பால்கே விருது ஒவ்வொரு வருடமும் திரைத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளிப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நடிகர் திலகம் சிவாஜி, கே.பாலசந்தர் ஆகியோருக்கு ஏற்கெனவே தாதா சாகேப் பால்கே விருது என வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் அமிதாப் பச்சன், வினோத் கண்ணா, லதா மங்கேஷ்கர், கன்னட நடிகர் ராஜ்குமார், கேரள இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கும் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது.