“புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” - இயக்குநர் வெற்றிமாறன்
மனம் புண்படும்படி உள்ளதாக கூறப்படும் குறிப்பிட்ட காட்சி நீக்கப்படும் என ‘வடசென்னை’ திரைப்படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்
தனுஷுடன் வெற்றிமாறன் இணைந்த 3வது படம் ‘வடசென்னை’. இப்படத்தில் அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, கிஷோர் என திரைபட்டாளமே இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மூன்று பாகங்களாக தயாராகவிருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்திற்கு நேர்மறையாக பல காரணங்கள் கூறப்பட்டாலும் எதிர்மறைக் கருத்துகளும் நிறைய வந்த வண்ணம் உள்ளன.
குறிப்பாக 100வருட தமிழ் சினிமாவில் இதுவரை பயன்படுத்தப்படாத ஆபாச வசனங்கள் நிறைய பயன்படுத்தப்பட்டதாக பலரும் குறை கூறினர். வடசென்னை மக்களை பிரதிபலிக்க கெட்ட வார்த்தைகள் அந்த அளவுக்கு முக்கியமான ஒன்றுதானா என்றும் சினிமா ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். மேலும் மீனவ சமுதாயத்தை இழிவுப்படுத்தும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக பல கருத்துகளும் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றன. இந்தப் பிரச்னைக்கு படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் அமைதி காத்த நிலையில் இது குறித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ''படத்தில் உள்ள சில காட்சிகள் மீனவ சமுதாய மக்களை இழிவுப்படுத்தும்படியும், அவர்கள் மனம் புண்படும்படியும் உள்ளதாக சிலர் கூறி வருகின்றனர். எங்களது நோக்கம் எந்த ஒரு ஒடுக்கப்பட்ட சமுதாயத்துக்கு எதிராகவும் சினிமா செய்வது அல்ல. மனம் புண்படும்படி உள்ளதாக கூறப்படும் குறிப்பிட்ட காட்சியை நீக்க முடிவு செய்துள்ளோம். அதற்காக தணிக்கைக் குழுவை நாடியுள்ளோம். 10 நாட்களுக்குள் காட்சி நீக்கப்பட்டுவிடும்.
‘வடசென்னை’யின் அடுத்தடுத்த பாகங்கள் அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதார பிரச்னை, அவர்களின் வாழ்வியல் நெருக்கடிகளை நிச்சயம் பேசும். ‘வடசென்னை’யின் கதாபாத்திரமோ, சம்பவமோ யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அவர்களிடம் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.