"அம்மாவுக்கு தமிழ் சினிமா... அப்பாவுக்கு உலக சினிமா": இயக்குநர் விக்னேஷ் சிவன்

"அம்மாவுக்கு தமிழ் சினிமா... அப்பாவுக்கு உலக சினிமா": இயக்குநர் விக்னேஷ் சிவன்
"அம்மாவுக்கு தமிழ் சினிமா... அப்பாவுக்கு உலக சினிமா": இயக்குநர் விக்னேஷ் சிவன்

எப்போதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பிவழியும் தியேட்டர்கள் ஆளற்ற வெளியாக சோர்வுடன் காட்சியளிக்கின்றன. ஒரு நாள் அவை திறக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கும் நிலையில், தியேட்டரில் படம் பார்த்த பொன் மாலைப்பொழுதுகளைப் பற்றி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இயக்குநர் விக்னேஷ் சிவன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

"என் தந்தையுடன் சென்று அலங்கார் தியேட்டரில் பார்த்த முதல் படம் பற்றிய ஞாபகங்கள் இன்றும் இருக்கின்றன. அந்தப் படம் என்டர் த டிராகன். அந்தப் படத்தை தியேட்டரில் பார்த்தது தெளிவாக நினைவிருக்கிறது. போலீஸ் அதிகாரியான எனது தந்தைக்கு உலகப் படங்கள் பார்ப்பதுதான் பிடிக்கும். அதுவும் புரூஷ் லீ படங்கள் பார்ப்பார். 90களில் சென்னையில் வெளியான ஆங்கிலம் மற்றும் அமெரிக்கப் படங்களுக்கு என்னை அழைத்துச் செல்வார். 

அம்மாவுக்கு தமிழ்ப்படங்கள்தான் பிடிக்கும். அவருடன் சேர்ந்து படங்களைப் பார்த்த அனுபவங்கள் வேறுவகையானது. நானும் அம்மாவும் முழுவதுமாக தமிழ்ப் படங்களைத்தான் பார்ப்போம். அண்ணாமலை மற்றும் பாட்சா படங்களை தியேட்டரில் பார்த்த அனுபவங்களை மறக்கமுடியாது. அப்போது எனக்கு ஐந்து அல்லது ஆறு வயது இருக்கும். ரோஜா, பம்பாய், துள்ளாத மனமும் துள்ளும் மற்றும் வாலி படங்களை குடும்பத்தினருடன் பார்த்த நினைவுகளும் உள்ளன.

நான் வளர்ந்த பிறகு சத்யம் தியேட்டரில் படம் பார்ப்பதை விரும்பினேன். தியேட்டரில் படம் பார்க்கும் அனுபவத்தை சென்னையில் உள்ள ஒவ்வொருவரும் என் கருத்தை ஏற்றுக்கொள்வார்கள். தியேட்டர்களுக்குச் செல்வதற்காக அவர்கள் உருவாக்கிய தரமும் சூழலும் நம்மை அழைக்கின்றன. தியேட்டர்களின் சூழலை நான் நேசிக்கிறேன். தேவி தியேட்டரில் நட்சத்திரங்களின் படங்கள் பார்ப்பதை நான் விரும்புவேன்.

ஆனால் என் படங்கள் ரிலீசாகும் போது அதே உணர்வைப் பெறமுடியவில்லை. போடா போடி, நானும் ரவுடிதான் மற்றும் தானா சேர்ந்த கூட்டம் படங்களை சில முறை தியேட்டர்களில் பார்த்திருக்கிறேன். அதில் ஒரு தயக்கம் இருக்கிறது. நான் நினைத்த ஒரு காட்சிக்கு பார்வையாளர்கள் வேறுமாதிரி ரியாக்ட் செய்தால் எனக்கு வருத்தமாக இருக்கும். அதனால் என் படங்களை தியேட்டர்களில் பார்ப்பதைத் தவிர்த்துவிடுகிறேன்.

ஆனால் பார்வையாளர்களுக்கும் தியேட்டருக்குமான உறவு என்பது படங்களைத் தாண்டியது. திரையில் ஒரு கதை நடக்கும். அதேபோல தியேட்டர் இருக்கைகளிலும் ஒரு கதை நடந்துகொண்டிருக்கும். காதல், நல்லிணக்கம், நட்பு முதல் குடும்பத்தினர் சந்திப்புகள் வரை அனைவருமே ஒரு தியேட்டரில் படம் பார்க்கும்போது பலவகையான உணர்ச்சிகளை அனுபவித்திருப்பார்கள். தியேட்டரில் ஒரு படத்தைப் பார்க்கும் அதிசய உணர்வை ஒருபோதும் ஒப்பிடவோ அல்லது வேறு எதனாலும் அதை மாற்றவோ முடியாது. தியேட்டர் எப்போதும் முதலிடத்தில்தான் இருக்கும்" என்று உற்சாகத்துடன் பகிர்ந்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com