"பல தோல்விகளை சந்தித்து தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்" - நடிகர் விக்ரம் பேச்சு

"பல தோல்விகளை சந்தித்து தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்" - நடிகர் விக்ரம் பேச்சு
"பல தோல்விகளை சந்தித்து தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்" - நடிகர் விக்ரம் பேச்சு

"நான் பல தோல்விகளை சந்தித்து இந்த இடத்திற்கு வந்துள்ளேன். கல்வி உள்ளிட்ட எதையும் பிரஷராக எடுத்துக் கொள்ளக் கூடாது. விழுந்தால் எழுந்து ஓட வேண்டும்" என நடிகர் விக்ரம் பேசினார்.

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படம் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் அந்த திரைப்படத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் நடிகர் விக்ரம், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் படக் குழுவினர் திருச்சி வந்தனர்.

இதையடுத்து திருச்சியில் உள்ள புனித வளனார் கல்லூரியில் இத்திரைப்படம் தொடர்பாக மாணவர்களை சந்தித்தனர். கல்லூரிக்கு வந்த நடிகர் விக்ரம் உள்ளிட்டோருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விக்ரம் பேசும்போது...

இந்த படத்தின் பெரிய பலம் இயக்குனர் அஜய் தான். அவர் எடுத்த படங்களில் இது வித்தியாசமானதாக இருக்கும். அவர் ஏற்கனவே எடுத்த இரு படங்களை விட கோப்ரா திரைப்படம் 'அதுக்கும் மேல இருக்கும்' என அவர் பாணியில் கூறினார்.

கோப்ரா படம் விஞ்ஞானம், திரில்லர், குடும்ப கதை உள்ளிட்ட பலவற்றின் கலவையாக இருக்கும். இந்த படத்தின் நாயகி ஸ்ரீநிதி அந்நியன் பார்த்து விட்டு என்னுடன் நடிக்க வேண்டும் என சிறு வயதில் ஆசைப்பட்டதாக என்னிடம் கூறினார்.

தொடர்ந்து மாணவர்களின் கேள்விக்கு பதில் அளித்த விக்ரம்,

சினிமா என்றாலே எனக்கு பைத்தியம். எனவே தான் இதில் கடுமையாக உழைக்கிறேன். ரசிகர்கள் எங்களை சூழ்ந்து போட்டோ, ஆட்டோ கிராஃப் வாங்க வருவது எங்களுக்கு எந்த வகையிலும் தொந்தரவு கிடையாது. இன்னும் சொல்லப் போனால் இதற்காக தான் ஏங்குகிறோம். இது கடவுள் கொடுத்த வரம்.

நான் நடித்த எல்லா படமும் எனக்கு பிடிக்கும். ஆனால் இப்போது என் மண்டைக்குள் கோப்ரா மட்டுமே ஓடிக் கொண்டிருக்கிறது. நாங்கள் பல தோல்விகளை சந்தித்து விட்டு தான் இந்த இடத்திற்கு வந்துள்ளோம். ஆனால் இந்த தலைமுறை தோல்வியை ஏற்க முடியாததாக மாறிவிட்டது. நாம் கல்வி உள்ளிட்ட எதையும் பிரஷராக எடுத்து கொள்ளக் கூடாது. விழுந்தால் கூட எழுந்து ஓட வேண்டும்.

சேதுவிற்கு பிறகு நம்ப முடியாத அங்கீகாரம் எனக்கு கிடைத்தது. அடுத்து இயக்குனர் ரஞ்சித்துடன் இணைந்து படம் நடிக்க உள்ளோம். அது முடிந்த பின்பு மீண்டும் அஜய் இயக்கத்தில் மற்றொரு படம் நடிக்க உள்ளேன்.

பொன்னியின் செல்வன் திரைப்படம் நாம் பெருமைப்படும் வகையில் இருக்கும். அந்த படத்தில் நானும் இருப்பது எனக்கு பெரிய பெருமை" என்றார். மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நடிகர் விக்ரம் கோப்ரா படத்திலிருந்து பாடல் ஒன்றையும், அந்நியன் பட வசனத்தையும் பேசி அசத்தினார்.

முன்னதாக கல்லூரிக்கு வந்த விக்ரம் மற்றும் நடிகைகளை காண ஏராளமான மாணவ மாணவியர் கல்லூரியில் குழுமியிலிருந்து ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தி வரவேற்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com