என் திறமையை பயன்படுத்தாத சினிமா: நீது சந்திரா கோபம்
என் திறமையை சினிமா சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று நடிகை நீது சந்திரா கூறியுள்ளார்.
தமிழில் யாவரும் நலம், யுத்தம் செய், ஆதிபகவன், சேட்டை, திலகர், வைகை எக்ஸ்பிரஸ் உட்பட சில படங்களில் நடித்தவர் இந்தி நடிகை நீது சந்திரா.
தற்போது அமெரிக்காவில் தொலைக்காட்சி தொடரில் நடித்துவரும் அவர் கூறும்போது, ’இந்தியில் ஷாரூக்கான், சல்மான் கான், ஆமீர்கான் போன்ற டாப் ஹீரோக்களுடன் நடிக்கும் தகுதி எனக்கு இருக்கிரது. ஆனால் என் திறமையை சினிமா சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதோடு நான் சினிமா குடும்பத்தில் இருந்து வந்தவள் இல்லை. எனக்கு சினிமாவில் காட்பாதர் என்று யாரும் இல்லை. அதனால் எனது சினிமா பயணம் ஸ்லோவாகவும் அதே நேரம் ஸ்டெடியாகவும் செல்கிறது. அதிக படங்களில் நடிக்காதது ஏன் என்று கேட்கிறார்கள்.
நான்கு வருடத்துக்கு முன் எனது தந்தை புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார். அவர் மறைவுக்குப் பின் குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பு எனக்கு இருந்தது. அதோடு நான் தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறேன். அதையும் கவனிக்க வேண்டியிருப்பதால் அதிக படங்களில் நடிக்கவில்லை. அதே நேரம் தமிழிலும் நடித்து வருவதால், நான் அங்கேயே செட்டிலாகிவிட்டதாக இந்தியில் நினைக்கிறார்கள். நல்ல கதைகள் கிடைத்தால் எந்த மொழியிலும் நடிப்பேன்’ என்றார்.