
’நான் நினைத்தால் ஒரு நிமிடத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் அமைச்சர் ஆகிவிட முடியும்’ என்று நடிகை ஹேமமாலினி கூறியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்தவர் ஹேமமாலினி. இந்தி சினிமாவில் நடித்து பிரபலமான அவர், பாலிவுட்டின் கனவுக்கன்னி என்று பெயர் பெற்றவர். இப்போது, உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா தொகுதியின் எம்.பியாக இருக்கிறார். இவர் சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் பான்ஸ் வாராவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’எம்.பி ஆவதற்கு முன்பே கட்சி பணிகளால் ஈடுபட்டுள்ளேன். நான் நினைத்தால் ஒரு நிமிடத்தில் முதலமைச்சராகிவிட முடியும். என் சுதந்திரம் பறிபோய்விடும் என்பதால் அதை விரும்பவில்லை. பிரதமர் மோடி பெண்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும், ஏழைகளுக்காகவும் உழைத்து வருபவர். அவரைப் போன்ற பிரதமர் கிடைப்பது கடினம். மற்ற கட்சித்தலைவர்கள் எது வேண்டுமானாலும் சொல்வார்கள். ஆனால் நாட்டுக்காக யார் அதிகம் உழைக்கிறார்கள் என்பதைத்தான் பார்க்க வேண்டும்’ என்றார்.