’ஏ லிஸ்ட்’ ஹீரோயின் ஆக நுழைவு தேர்வு இருக்கா? கேட்கிறார் டாப்ஸி!
’ஏ’ லிஸ்ட் ஹீரோயின் ஆவதற்கு ஏதாவது நுழைவுத் தேர்வு இருந்தால் சொல்லுங்கள், எழுதுகிறேன் என்று நடிகை டாஸ்ஸி கோபமாகச் சொன்னார்.
தமிழில், ஆடுகளம் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் டாப்ஸி. தொடர்ந்து ஆரம்பம், காஞ்சனா 2 உட்பட சில படங்களில் நடித்தார். தெலுங்கிலும் நடித்துள்ள டாப்ஸி, இப்போது இந்தியில் கவனம் செலுத்தி வருகிறார்.
இவர் நடித்த, ’பிங்க்’,’நாம் ஷபானா’, ’ஜூத்வா 2’ ஆகிய இந்திப் படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளன. இதையடுத்து அவருக்கு படவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இப்போது டட்கா, பிளிக்கர் சிங், முல்க் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
அவர் கூறும்போது, ’2017-ம் ஆண்டு எனக்கு நல்லதாக அமைந்தது. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்தேன். அவை நன்றாக ஓடியுள்ளன. நடிகையாக நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு நல்ல கேரக்டர்கள் அமைகின்றன. ஆனால் என்னை ’ஏ லிஸ்ட்’ நடிகை இல்லை என்று சொல்கிறார்கள். சமீபத்தில் ஃபேஷன் ஷோ ஒன்றில் கலந்துகொள்ள ஒருவர் என்னை பரிந்துரைத்தபோது, ’அவர் ஏ லிஸ்ட் நடிகை இல்லை’ என்று டிசைனர் ஒருவர் சொன்னாராம். இது என்னைப் பாதித்தது. அதென்ன ஏ லிஸ்ட் நடிகை? அதற்கு ஏதாவது எக்ஸாம் இருக்கிறதா? நுழைவு தேர்வு ஏதும் இருந்தால் எழுதி அந்த கிளப்பில் நானும் சேர்கிறேன்’ என்றார் டாப்ஸி.