“மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை இந்த விருது அதிகரிக்கும்” - முருகானந்தம் மகிழ்ச்சி

“மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை இந்த விருது அதிகரிக்கும்” - முருகானந்தம் மகிழ்ச்சி

“மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை இந்த விருது அதிகரிக்கும்” - முருகானந்தம் மகிழ்ச்சி
Published on

மாதவிடாய் குறித்து பேசும் ‘பீரியட். எண்ட் ஆஃப் செண்டன்ஸ்’ படத்துக்கு ஆஸ்கர் கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாக அருணாச்சலம் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

91 வது ஆஸ்கர் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டால்பி ஸ்டூடியோவில் கோலாகலமாக இன்று நடைபெற்று வருகிறது. இதில், ஆவணக் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருது ‘பீரியட். எண்ட் ஆஃப் செண்டன்ஸ்’ என்ற படத்துக்கு கிடைத்துள்ளது.  மாதவிடாய் குறித்த மூட நம்பிக்கைகளை இந்திய பெண்கள் எப்படி எதிர்த்து போராடுகிறார்கள் என்பதை இப்படம் பதிவு செய்துள்ளது. 

கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் உருவாக்கிய மலிவு விலை நாப்கினை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படம், கோவை உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் படமாக்கப்பட்டது. இந்நிலையில் ‘பீரியட். எண்ட் ஆஃப் செண்டன்ஸ்’ படத்துக்கு ஆஸ்கர் கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாக அருணாச்சலம் முருகானந்தம் தெரிவித்துள்ளார். 

மேலும் பேசிய அவர், ''பெண்களின் மாதவிடாய் குறித்த கதைக்கருவை கையில் எடுப்பது சற்று கடினமானது. கணவன் கூட மனைவிடம் பேச தயங்கும் விஷயமாக இருக்கும் மாதவிடாய் குறித்து படமும், குறும்படமும் எடுத்து வெற்றியடைந்துள்ளோம். திரைப்படத்தில் சொல்ல முடியாத விஷயங்களை குறும்படத்தில் சொல்லலாம். 

உத்திரப்பிரதேசத்திலுள்ள ஹாக்பூர் என்ற பின் தங்கிய ஒரு கிராமத்தில் இந்தக் குறும்படத்தை எடுத்தோம். அந்தக் கிராமத்தில் பெண் குழந்தைகள் பிறந்தாலே கொன்றுவிடும் அளவுக்கு பழமைவாதிகளாக இருந்தனர். அப்படிப்பட்ட கிராமத்தில் மாதவிடாய் குறித்து ஆவணப்படம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து எடுத்தோம். இக்குறும்படத்துக்கு இந்த அளவுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பதை நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இந்த விருது மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை மேலும் அதிகரிக்கும். 

நாங்கள் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபடும் போது,  இந்தியாவில் வெறும் 5% பெண்கள் தான் நாப்கின்கள் உபயோகித்தார்கள். இதை இந்திய அரசே நம்ப மறுத்தது. ஆனால் ‘பேட்மேன்’ திரைப்படத்துக்குப் பிறகு கிராமப்புறங்களில் 34% பெண்கள் நாப்கின்கள் பயன்படுத்துகிறார்கள். இந்த ஆஸ்கர் விருது மேலும் நாப்கின் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கச்செய்யும். விரைவில் இந்தியாவில் 100சதவீத பெண்கள் நாப்கின்கள் உபயோகிப்பார்கள் என்ற நம்பிக்கையுள்ளது என்று தெரிவி்த்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com