சினிமா
“மக்களின் அவல நிலையை நினைத்துத் தூங்க முடியவில்லை” - ஏ. ஆர்.ரஹ்மான் வருத்தம்
“மக்களின் அவல நிலையை நினைத்துத் தூங்க முடியவில்லை” - ஏ. ஆர்.ரஹ்மான் வருத்தம்
ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மான், இன்ஸ்டா பக்கத்தில் நீல் மோர்கனுடன் நேரலையில் கலந்து கொண்டு உரையாடினார்.
ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மானுக்கு அதிக விளக்கம் தேவை இல்லை. கோலிவுட் இசைக்கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கிய இவர், தனது திறமை மூலம் தமிழரின் அடையாளத்தை உலகிற்கு உணர்த்தினார். அவர் இப்போது உலகின் குறிப்பிடத்தக்க இசைக்கலைஞர்களுடன் ‘ஹேண்ட்ஸ் அவுண்ட் தி வேர்ல்ட்’ என்ற புதியதாக புரொஜட் மூலம் கைகோர்த்துள்ளார்.
இந்நிலையில் உலகமே பூமி தினமாகக் கொண்டாடி வரும் ஏப்ரல் 22 ஆம் தேதியன்று இவர் இன்ஸ்டா பக்கத்தில் நீல் மோர்கனுடன் ஒரு நேரலையில் உரையாடல் நடத்தினார். அப்போது கொரோனா நோய்த் தொற்று காரணமாக உலகமே ஊரடங்கில் சிக்கித்தவித்து வருவது குறித்து ரஹ்மான் தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டார்.
உலகம் ஒரு கடினமான நேரத்தைக் கடந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். மேலும் ஊரடங்கு காலத்தில் பட்டினி கிடக்கும் மற்றும் வேலை இல்லாத நிலைக்கு ஆளாகியுள்ள ஏராளமான மக்களின் அவல நிலையை நினைத்து தன்னால் நன்றாகத் தூங்க முடியவில்லை என்று உருக்கமாகக் கூறினார். அவர்களும் இந்தப் பூமியின் ஒரு பகுதிதான் என்று கூறிய அவர், வேலைக்குச் சென்று சம்பாதித்தால்தான் உணவை உண்ண முடியும் என்ற நிலையில் பலர் இருக்கிறார்கள் என்பதை வேதனையோடு பகிர்ந்து கொண்டார்.
எந்தக் கேள்விகளுக்கும் உணர்ச்சிவசப்படாமல் பதிலளிக்கும் பழக்கம் உடைய ரஹ்மானே இன்றைக்கு நடந்து கொண்டிருக்கும் கொரோனா தாக்குதல் குறித்து வெளிப்படையாக மனம் விட்டுப் பேசியுள்ளார். ஆகையால் அவரது பேச்சு உலக அளவில் உள்ள இசைக்கலைஞர்களிடம் போய்ச் சேர்ந்துள்ளது. அவர்கள் அனைவரும் இந்த நெருக்கடியான தருணம் குறித்து கருத்திட்டு வருகின்றனர்.