சினிமாவை விட்டு ஓடியா போயிட்டேன்? ராதிகா பாய்ச்சல்!
தமிழில், இயற்கை, வர்ணஜாலம், மீசை மாதவன் உட்பட சில படங்களில் நடித்தவர் கன்னட நடிகை ராதிகா. இவரை தமிழில், குட்டி ராதிகா என்று அழைத்தனர்.
கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் ஹெச்.டி. குமாரசாமியை திருமணம் செய்துகொண்ட இவர் பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்தார். இவர்களுக்கு ஷமிதா என்ற பெண் குழந்தை உள்ளது. இப்போது மீண்டும் படங்களில் நடித்துவருகிறார் ராதிகா. இந்நிலையில் இருவரும் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாயின.
ராதிகா கூறும்போது, ’எனது பெயர் இப்போது ராதிகா குமாரசாமி. அப்படியே என்னை அழையுங்கள். நானும் குமாரசாமியும் ஒன்றாகத்தான் இருக்கிறோம். நாங்கள் பிரியவில்லை. நான் இறக்கும்வரை அவர் பெயரை என்னிடம் இருந்து பிரிக்க முடியாது. இப்போது அர்ஜூன், ஜே.டி சக்கரவர்த்தியுடன் ’கான்ட்ராக்ட்’ என்ற படத்தில் நடித்துவருகிறேன். இந்தப் படத்தின் கதை என்னைச் சுற்றிதான் நடக்கிறது. கான்ட்ராக்ட் படம் மூலம் மீண்டும் நடிக்க வருகிறீர்களா? என்று கேட்கிறார்கள். மீண்டும் வருவது என்றால், நான் என்ன சினிமாவை விட்டு ஓடியா போய்விட்டேன்? இங்கேதான் இருக்கிறேன். நல்ல கதைகளில் நடிக்க வேண்டும் என்பதால் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். கூடவே எனக்கு சில பிசினஸ் இருக்கிறது. அதையும் கவனிக்க வேண்டும் என்பதால் தொடர்ந்து சினிமாவில் நடிக்க முடியவில்லை’ என்றார்.