தயாரிப்பாளர்களை அவமானப்படுத்துவதா? விஷால் ஆவேசம்
ஊதிய பிரச்னையை காரணம் காட்டி படப்பிடிப்பை நிறுத்த பெப்சி ஊழியர்களுக்கு அதிகாரம் இல்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் கூறினார்.
திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கத்துக்கும் (பெப்சி) இடையே, 3 ஆண்டுக்கு ஒரு முறை புதிய சம்பளம் நிர்ணயிப்பது வழக்கம். கடந்த முறை நியமித்த புதிய சம்பள விகிதம் குறித்து ’பெப்சி’யில் உள்ள சில சங்கங்களுக்குள் பிரச்னை நிலவுகிறது. இதையடுத்து படப்பிடிப்பில் அவர்கள் தன்னிச்சையாக சம்பளம் மற்றும் பேட்டாவை அதிகரித்து தருமாறு நிர்பந்திக்கிறார்கள். இல்லாதபட்சத்தில் படப்பிடிப்புக்கு இடையூறு ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில் ’பில்லா பாண்டி’, பிரபுதேவா நடிக்கும் ’யங் மங் சங்’ஆகிய படங்களின் படப்பிடிப்புகளில் பெப்சி தொழிலாளர்கள் பிரச்னை செய்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பிரச்னை தீர்த்து வைக்கப்பட்டது. பெப்சி தொழிலாளர்களின் பிரச்னை தொடர்ந்து நடப்பதால் படப்பிடிப்புகளுக்கு பிரச்னை ஏற்படுவதாக தயாரிப்பாளர்கள் சிலர் புகார் கூறினர். இதையடுத்து இந்தப் பிரச்னை பற்றி பேசத் தயாரிப்பாளர்களின் அவசரக் கூட்டம் நடிகர் விஷால் தலைமையில் இன்று நடந்தது.
பின்னர் விஷால் கூறும்போது, ’ஊதிய பிரச்னையை காரணம் காட்டி படப்பிடிப்பை நிறுத்த பெப்சி ஊழியர்களுக்கு அதிகாரம் இல்லை. ஊழியர்கள் மீது மரியாதை இருந்தாலும் தயாரிப்பாளர்களை அவமானப்பட விடமாட்டோம். பெப்சி அமைப்பில் இல்லாத தொழிலாளர்களை வைத்து நாளை முதல் படப்பிடிப்பை நடத்திக்கொள்ள தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது’ என்றார்.