கொரோனா காலத்திலும் ரசிகர்களை விஜய் 'எங்கேஜிங்' ஆக வைத்திருப்பது எப்படி?

கொரோனா காலத்திலும் ரசிகர்களை விஜய் 'எங்கேஜிங்' ஆக வைத்திருப்பது எப்படி?

கொரோனா காலத்திலும் ரசிகர்களை விஜய் 'எங்கேஜிங்' ஆக வைத்திருப்பது எப்படி?
Published on

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை 'பீஸ்ட்' மோடில் கொண்டாடத் தொடங்கியுள்ளனர் அவரது ரசிகர்கள். கடந்த சில நாட்களாகவே விஜய் குறித்த பதிவுகள்தான் இணையம் எங்கும் நிறைந்துள்ளன. அவர்களுக்கு தீனிபோடும் விதமாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளனர். பிறந்தநாளுக்காக மட்டும் கடந்த சில நாட்களாக விஜய் ரசிகர்கள் எங்கேஜிங்காக இல்லை. இந்த கொரோனா காலத்திலும், மற்ற நடிகர்களின் ரசிகர்களை காட்டிலும், விஜய் ரசிகர்கள் எங்கேஜிங்காகவே இருந்தனர். இன்னும் சொல்லப்போனால் விஜய் தனது ரசிகர்களை ஈடுபாட்டுடன் வைத்திருந்தார் எனலாம்.

கொரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் திரைப்படத்துறை முற்றிலுமாக முடங்கி கிடக்கும் சூழல். நவம்பர் மாதத்தில்தான் திரையரங்குகள் திறக்கப்பட, சின்ன சின்ன படங்கள் மட்டுமே தியேட்டர்களில் வெளியானது. முதல் பெரிய படமாக பொங்கலை ஒட்டி 'மாஸ்டர்' படம் வெளியானது. கொண்டாடி தீர்த்தனர் விஜய் ரசிகர்கள். மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகி அதற்கேற்ப படமும் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. அப்போது இருந்தே, அடுத்தடுத்த அறிவிப்புகளால் ரசிகர்களை கவர்ந்து வந்தார். 'மாஸ்டர்' படத்தின் சூட்டோடு சூட்டாக நெல்சன் இயக்கத்தில் நடிக்கும் அறிவிப்பை வெளியிட்டார். இளம் இயக்குநர், இளம் நடிகை என வித்தியாசமான கூட்டணியுடன் அவர் இணைந்தது விஜய் ரசிகர்களை குஷியின் உச்சத்துக்கே கொண்டு சென்றது.

தொடர்ந்து ஷூட்டிங் சென்றது, ஸ்பாட் போட்டோஸ் என வெளியாகி, மேலும் எதிர்பார்ப்பை எகிறவைத்தது. அஜித்தின் 'வலிமை', ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' படங்கள், விஜய்யின் 'பீஸ்ட்' படத்துக்கு முன்பே ஆரம்பித்தாலும், இன்னும் அதன் படப்பிடிப்புகள் முடியவில்லை. ஆனால் விஜய்யோ அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுவிட்டார். வழக்கமாக தமிழ் படங்களில் நடித்து தெலுங்கு ரசிகர்களை ஈர்த்திருந்த விஜய் அடுத்தப் படத்தை தெலுங்கு இயக்குநர் வம்ஸியிடம் கொடுத்து அனைத்து ரசிகர்களுக்கும் சர்ப்ரைஸ் கொடுத்தார்.

இடையில் தேர்தல் பரபரப்பு வேறு. வழக்கமாக தேர்தல் என்றால் விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு எந்தக் கட்சிக்கு கிடைக்கும் என்பது பரபரப்பாக இருக்கும். இந்த ஆண்டும் அது சற்று குறைந்தாலும், தேர்தல் நாள் அன்று விஜய்யின் ஒற்றை நிகழ்வு மொத்த கவனத்தையும் ஈர்த்தது. தனது வீட்டில் இருந்து வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் விஜய் பயணமாக அது வைரலின் உச்சத்துக்கே சென்றது. தேர்தலின்போதே விஜய்யை ரசிகர்கள் அரசியலுக்கு அழைப்பு விடுத்து வந்தனர். தேர்தல் முடிந்தபின்பும், ரசிகர்கள் அவரை விடவில்லை.

சமீபத்தில் திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் விஜய்யை அரசியலுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக, தமிழக முதல்வர் ஸ்டாலின், செங்கோலை விஜய்யிடம் கொடுத்து, 'தம்பி வா... தலைமை ஏற்க வா' என அரசியலுக்கு வரச் சொல்லி அழைப்பது போன்ற வாசகத்துடன், போஸ்டர் ஒட்டி கூடுதல் பரபரப்பை கிளப்பினர். அடுத்த நாளே கொரோனா தடுப்பூசியில் விஜய் போட்டோவை வைத்து, 'தமிழக மக்களை காக்கும் ஒரே தடுப்பூசி' என குறிப்பிட்டது ஹைலைட்டாக அமைந்தது.

ரசிகர்கள் இப்படி செய்தாலும் கொரோனா காலத்தில் அவர்களை வைத்து மக்களுக்கு நற்பணிகளை செய்யத் தொடங்கினார் விஜய். தேர்தலுக்கு முன்பாகவே ரசிகர்களை மாவட்டம் வாரியாக சந்தித்து ஆலோசனை நடத்தியவர், கொரோனா ஊரடங்கால் சிரமப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் என ரசிகர்களுக்கு அன்பு கட்டளை விதித்தார். அதை ஏற்று, பசிக்கும் ஏழைகளுக்கு உணவு வழங்குவது முதல், கிராமிய கலைஞர்களுக்கு உதவி, மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளுக்கு உதவி, மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் உதவி என சுழன்றுகொண்டு பணியாற்றினார்கள் விஜய்யின் ரசிகர்கள். ரசிகர் மன்றமாக மட்டுமில்லாமல் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் விஜய் தன்னுடைய ரசிகர் மன்றம் அனைத்தையும் விஜய் மக்கள் இயக்கமாக மாற்றியவர். அவரின் ரசிகர்கள் செய்த உதவி இந்த கொரோனா பேரிடரில் கைகொடுக்கும் விதமாக அமைந்தது.

இதுபோக அவ்வப்போது விஜய்யின் மகன் சஞ்சய் வீடியோக்கள் வெளியாவது, ஐ.எம்.டி.பி-யின் 2021-ம் ஆண்டு பிரபல இந்தியப் படங்களின் வரிசையில் விஜய் நடித்த 'மாஸ்டர்' முதலிடத்தைப் பிடித்தது, யூடியூபில் 'வாத்தி கம்மிங்' பாடல் வீடியோ 150 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்தது போன்ற சம்பவங்களும் அரங்கேற, கொரோனா தொற்றால் மற்ற நடிகர்களின் ரசிகர்கள் ஒரு அப்டேட்டுக்கு ஏங்கி கிடக்க விஜய்யோ தனது ரசிகர்களை அடுத்தடுத்த அறிவிப்பு மற்றும் செயல்பாடுகளால் குஷிப்படுத்திக்கொண்டே இருந்துள்ளார்.

- மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com