“துப்பாக்கியோட கனம் அதிகமாகவே இருக்கும்; அதை சரியா கையாளணும்” - ’நச்’ பதில் கொடுத்த சிவகார்த்திகேயன்
உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம், சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் புரொடக்ஷன்ஸ் மற்றும் திரு. ஆர். மகேந்திரன் இணைந்து தயாரிக்க சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் அமரன் திரைப்படம் தீபாவளி அன்று (31 அக்டோபர் 2024) உலகமெங்கும் வெளியாகிறது. திரைப்படத்தை ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
இந்திய ராணுவ வீரர்களின் தீரம்மிக்க வீரச்செயல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திரைப்படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி இருக்கிறார். காஷ்மீரின் சவால் மிக்க நிலப்பகுதிகளில் இந்தப் படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்திய ராணுவ மேஜராக நடித்திருக்கும் சிவகார்த்திகேயன்..
அமரன் திரைப்படத்தில் இந்திய இராணுவ மேஜர் வரதராஜனாக நடிக்கும் கதாநாயகன் சிவகார்த்திகேயன் உணர்ச்சிகரமான நடிப்பையும், அதிரடி ஆக்சனையும் வெளிப்படுத்தியிருப்பதால் அமரன் திரைப்படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கதாநாயகி சாய் பல்லவி தனது ஆழமான நடிப்பினால் படத்துக்குச் சிறப்பானப் பங்களிப்பை அளித்துள்ளார்.
கதாநாயகன் சிவகார்த்திகேயன் படத்துக்கு முதன்முறையாக இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சண்டைக்காட்சிகளை அன்பறிவு மாஸ்டர்கள் மற்றும் ஸ்டெஃபான் ரிக்டர் இணைந்து வடிவமைத்துள்ளனர். இந்தப் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக சி.எச். சாய் அறிமுகமாகிறார்.
புரொடக்ஷன் டிசைனர் ராஜீவன், கலை இயக்குனர் சேகர், எடிட்டர் ஆர். கலைவாணன் மற்றும் துணைத் தயாரிப்பாளர் காட் ப்ளஸ் எண்டர்டெய்ன்மெண்ட் ஆகியோர் படத்துக்குப் பலம் சேர்த்துள்ளனர்.
சமீபத்தில் அமரன் வெளியீடு குறித்து பதிவிட்டிருந்த படக்குழு, “தன்னலமற்ற நமது இந்திய இராணுவ வீரர்களின் வீரத்தைக் கண்டு வியக்கவும், தியாகத்தைப் போற்றவும் தயாராகுங்கள், ஜெய்ஹிந்த்!” என்று கூறியிருந்தது.
துப்பாக்கியோட கனம் எப்படி இருக்கு?
படம் தீபாவளியன்று அக்டோபர் 31-ம் தேதி திரையரங்கில் வெளியாகவிருக்கும் நிலையில் படத்துக்கான புரமோசன் வேலைகள் நடந்துவருகின்றன.
அப்படி புரொமோசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது, படம் உருவானது குறித்து படக்குழுவிடம் கேட்கப்பட்டது. அப்போது தயாரிப்பாளராக பேசிய கமல்ஹாசன், “இந்த கதையை நாங்கள் தேடி பிடிக்கவில்லை, அதுவாகவே அமைந்துவிட்டது, அமரன் திரைப்படத்தின் மூலம் எங்கள் கடமையை செய்திருக்கிறோம்” என்று பேசினார்.
பின்னர் சிவகார்த்திகேயனிடன் ராணுவ வீரரா நடிச்சிருக்கீங்க துப்பாக்கியோட கனம் எப்படி இருக்கு என்ற கேள்வி வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “துப்பாக்கியோட கனம் அதிகமாகவே இருக்கு, அதை சரியான விதத்தில் கையாள வேண்டும், எங்களுக்கு தைரியம் கொடுக்க உலகநாயகன் இருக்கிறார்” என்று ஸ்மார்ட்டாக ரிப்ளை கொடுத்தார்.
தி கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய் ”துப்பாக்கிய புடிங்க சிவா, இனிமே எல்லாமே உங்க கைல தான் இருக்கு” என்று பேசிய வசனம் விஜய் அரசியலுக்கு சென்றபிறகான வெற்றிடத்தை சிவகார்த்திகேயன் தான் நிரப்பபோகிறாரா என்ற பேசுபொருளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.