ரஜினியின் பரபரப்பான அரசியல் வருகை, அண்மையில் தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக அவர் தெரிவித்த சர்ச்சைக்குறிய கருத்து இதற்கு நடுவே இன்று வெளியானது பா.ரஞ்சித் இயக்கியுள்ள "காலா" திரைப்படம் . ரஜினியை வைத்து ரஞ்சித் இயக்கிய முந்தைய படமான கபாலி, ரஜினியின் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை என்றே சொல்ல வேண்டும். அதனால் ரஜினியை காலாவில் எப்படி காட்டியிருப்பார் ? என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது. அதனை சரியாக காலாவில் பூர்த்தி செய்திருக்கிறார் ரஞ்சித்.
முதலில் ஒரு அழுத்தமான கதையை தேர்ந்தெடுத்து அதனை உருவாக்கியதற்கு ரஞ்சித்துக்கு பூங்கொத்துகள். ஆம், "நிலமே எங்கள் உரிமை" என ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியலை பேசுகிறான் "காலா". சரி காலாவின் கதைதான் என்ன ? மும்பை தாராவி குடிசைப் பகுதியை "பியூர் மும்பை" என்ற திட்டத்தின் மூலம் கையகப்படுத்தி, அதில் அடுக்குமாடி குடியிருப்புகளில் அங்கு வசிப்பவர்களுக்கு சிறிய இடம் ஒதுக்க நினைக்கிறார்கள் அரசியல்வாதிகளும், கார்ப்பரேட் நிறுவனமும். இதற்கு இடையூறாக இருந்த நிலம் எங்களுக்கு சொந்தமானது என போர்க்கோடி தூக்கி மக்களின் செல்வாக்கோடு இருக்கிறார் ரஜினிகாந்த். ரஜினிகாந்தை வீழ்த்தி தாராவியை கைப்பற்றினார்களா இல்லையா என்பது காலாவின் கதை சுறுக்கம்.
காலாவை ஒட்டுமொத்தமாக தன் தோளில் சுமக்கிறார் ரஜினிகாந்த். அளவான வசன உச்சரிப்புகள், பஞ்ச் வசனங்கள் இல்லை. மனைவி ஈஸ்வரி ராவ் உடனான அன்பையும் காதலையும் வெளிப்படுத்தும் காட்சிகளிலும், முன்னாள் காதலி ஹூமா குரேஷியுடனான உரையாடல்களிலும், ரஜினிக்கு நிகர் ரஜினியே என நிரூபிக்கிறார். அதேநேரத்தில் சண்டை காட்சிகளில் பழைய ரஜினியின் அதே உற்சாகம். படத்தில் வில்லனாக வரும் நானா பட்டேக்கருடனான சந்திப்புகளின்போது ரஜினியின் பெர்மான்ஸ் எல்லாம் கிளாஸ் அண்ட் மாஸ்.
ரஜினிக்கு அடுத்தப்படியாக வில்லனாக வருகிறார் பாலிவுட் நடிகர் நானா பட்டேகர். கபாலியில் வில்லன் கதாப்பாத்திரம் ரஜினிக்கு டஃப் கொடுப்பதாக இருக்காது. ஆனால், இதில் ரஜினிக்கு இணையான வில்லனாக, சிரித்துக்கொண்டே குரூரமாக சிந்திக்கும் வில்லனாகவும், அதிகாரமே என் உரிமை கர்ஜிக்கும் கதாப்பாத்திரத்தில் நானா பட்டேகர் செம்ம "ஃபிட்". இவர்களுக்கு அடுத்தபடியாக ரஜினியின் மனைவியாக ஈஸ்வரி ராவ் வாழ்ந்திருக்கிறார். முன்னாள் காதலி ஹூமா குரேஷி வீட்டுக்கு வந்தவுடன் வரவேற்கும் காட்சியும், ஹூமா குரேஷியை ரஜினி சந்தித்துவிட்ட வந்த பின்பு அவர் காட்டும் கோபமும் ஏக்கமும், அட போட வைக்கிறார் ஈஸ்வரி ராவ்.
சரீனா கதாப்பாத்திரத்தில் ரஜினியின் முன்னாள் காதலியாகவும், என்.ஜி.ஓ. சமூக ஆர்வலராகவும் வரும் ஹூமா குரேஷிக்கு கனமான கதாப்பாத்திரம். ஆனால் குறையில்லாமல் செய்திருக்கிறார் அவர். இதற்கு அடுத்தப்படியாக காலாவின் நண்பராக வரும் சமுத்திரக்கனியும், மகனாக வரும் வத்திக்குச்சி திலீபனும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாப்பாத்திரத்துக்கு சிறப்பு செய்திருக்கிறார்கள்.
காலாவுக்கு பெரும் உழைப்பை கொட்டிக் கொடுத்திருக்கிறார் கலை இயக்குநர் ராமலிங்கம். மும்பை தாராவியின் செட் அமைத்த உழைப்பு பிரமிப்பை தருகிறது. இதனை குறையில்லாமல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் முரளி.ஜி. முக்கியமாக மழை சண்டை காட்சியில் முரளியின் ஒளிப்பதிவு, ரஜினி ரசிகர்கள் நரம்புகளை துடிக்க செய்யும். காலா முழுவதும் தொய்வில்லாமல் செல்வதற்கு பெரும் பணியை சிறப்பாக செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்.
காலா அதிகமாக அரசியல் பேசுகிறது. அதற்கு ஏற்றார்போல படத்தில் வசனங்கள் இருக்க வேண்டும். காலாவுக்கு மூன்று பேர் வசனம் எழுதியிருக்கிறார்கள், ரஞ்சித், மகிழ்நன் மற்றும் ஆதவன் தீட்சன்யா. படத்தில் வரும் வசனங்கள் அனைத்தும் பார்ப்பவர்களின் மனசாட்சியை கேள்விக் கேட்கும், குடிசையில் வாழ்பவர்கள் எதற்காக துரத்தப்படுகிறார்கள் என்ற கேள்விகளுக்கு சாட்டையடி வசனங்களால் பதில் தருகிறார்கள் மூன்றும் வசனக்கர்த்தாக்களும்.காட்சிக்கு காட்சிக்கு டெம்போவை ஏத்துகிறது சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை. படத்தில் பாடல்கள் ஏதும் முழுவதுமாக காட்சிப்படுத்தவில்லை.
சரி காலா முழுவதும் நன்றாகவே இருக்கிறதா ? குறையே இல்லையா ? இருக்கிறது. காலாவின் முதல் பாதி ஆரம்பக் காட்சிகள் மெதுவாகவே செல்கிறது. அதுவும், ஹூமா குரேஷி - ரஜினி இடையிலான காட்சிகள் ரசிக்குபடி இருந்தாலும் சற்றே சோர்வைத் தருகிறது. பின்பு, நானா பட்டேகர் - ரஜினி நேரடியாக சந்திக்கும் காட்சிக்கு பின்புதான் படம் சூடுபிடிக்கிறது. ஆனால் அதற்குள்ளாக 30 நிமிடங்கள் ஓடிவிடுவது பார்ப்பவனுக்கு அயர்ச்சியை தருகிறது. இதை தவிர்த்துவிட்டு காலா மிக முக்கியமான அரசியலை பேசுவதால், இந்த அயர்ச்சியை புறம் தள்ளிவிடலாம்.
காலாவில் ஒரு இயக்குநராக ரஞ்சித் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளார். அதற்கு உதாரணமாக ரஜினிக்கு என்று வைக்காமல் கதைக்காக வைக்கப்பட்ட காட்சிகளே அதற்கு சான்று. ரஜினி பேசும் ஒவ்வொரு வசனமும் இயக்குநர் ரஞ்சித்தே தெரிகிறார். மிக முக்கியமாக காவல் நிலையத்தில் ரஜினிக்கும், அரசியல்வாதியாக வரும் சாயாஜி ஷிண்டேவுக்கும் இடையிலான காட்சி, ஆஸம் ரஞ்சித். எளிய மக்களின் வேதனையும், அவர்களின் வாழ்வியல் சூழல்களையும் ரஞ்சித்தைவிட வேறு எவரால் காட்சிப்படுத்த முடியும் என மிகப்பெரிய கேள்வி எழுகிறது. எது எப்படியோ இது ரஜினி படமா என்று கேட்டால் அதனை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். "காலா" மூலமாக ரஞ்சித், ரஜினி எனும் சூப்பர் ஸ்டார் பிம்பம் மூலம் தன் அரசியல் கருத்துகளை சொல்லியிருக்கிறார். கடைசியாக எப்படி இருக்கிறது காலா ? சில இடங்களில் மாஸாகவும், பல இடங்களில் கிளாஸாகவும் இருக்கிறது.