தி கிரேட் இந்தியன் கிச்சன்: அன்று Netflix, Prime நிராகரிப்பு, இன்று NeeStream-ன் அடையாளம்!

தி கிரேட் இந்தியன் கிச்சன்: அன்று Netflix, Prime நிராகரிப்பு, இன்று NeeStream-ன் அடையாளம்!
தி கிரேட் இந்தியன் கிச்சன்: அன்று Netflix, Prime நிராகரிப்பு, இன்று NeeStream-ன் அடையாளம்!

அன்று நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் ஆகிய பிரபல ஓ.டி.டி. நிறுவனங்களால் நிராகரிக்கப்பட்ட 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' (The Great Indian Kitchen) என்னும் படைப்பு இன்று 'நீ ஸ்ட்ரீம்' (NeeStream) என்னும் உள்ளூர் ஓ.டி.டி தளத்துக்கே அடையாளமாக இருந்து, அந்தத் தளத்தை பிரபலப்படுத்தியிருக்கிறது.

சமீத்தில் கருத்தியல் ரீதியில் தமிழ்ப் பரப்பிலும் அதிகம் விவாதிக்கப்பட்ட மலையாள படம், 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'. இந்தியக் குடும்ப அமைப்புமீதான விமர்சனத்தை முன்வைக்கும் இந்தப் படைப்பு, திரை மொழியிலும் கவனம் ஈர்த்துள்ளது. இப்படம் குறித்த பார்வை இங்கே > இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'.

இந்தப் படம் குறித்த கருத்துகள் குவியத் தொடங்கியதும், நெட்டிசன்களிடம் முதலில் எழுந்த கேள்வி: படம் எங்க இருக்கு... நெஃப்ளிக்ஸிலா, ப்ரைமிலா? என்பதுதான். அங்கே சென்று தேடிப் பார்த்த பலருக்கும் ஏமாற்றம்தான் மிஞ்சியது. பின்னர்தான் தெரியவந்தது, அந்த இரண்டு பிரபல ஓடிடி தளங்களும் ஏமாற்றியது தேடிய ரசிகர்களை மட்டுமல்ல, இந்தப் படத்தைத் தயாரித்தவர்களையும்தான் என்பது. இதுதொடர்பாக பேட்டி ஒன்றில், 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' இயக்குநர் ஜோ பேபி விவரித்துள்ளார்.

லாக்டவுன் தொடங்கிய பின், ஜூலையில் ஆரம்பித்து சில மாதங்களிலேயே படப்படிப்பு முடிந்துவிட்டது. தியேட்டரில் வெளியிட முடியாத சூழலில்தான் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் உள்ளிட்ட பிரபல ஓடிடி தளங்களை படக்குழு அணுகியிருக்கிறது. அமேசான் ப்ரைம் சார்பில் படம் பார்க்கப்பட்டது. ஆனால், தங்கள் வரையறைகளுக்குள் இல்லை என்பதால் படத்தை வாங்க முடியாது என்று கைவிரித்துவிட்டார்கள். ப்ரைம் ஆவது பரவாயில்லை, நெட்ஃப்ளிக்ஸ் தரப்பிலோ படத்தைப் பார்க்காமலயே கதவடைத்துவிட்டார்கள். மேலும் சில ஓடிடி தளங்களிலும் இதேபோன்ற நிலைதான்.

இந்தச் சூழலில்தான், மலையாள ஓடிடி தளமான 'நீ ஸ்ட்ரீம்' (NeeStream) படத்தை வெளியிட முன்வந்தது. அந்த ஓடிடி தளத்தில்தான் படமும் ரிலீஸ் ஆனது. 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்க, உள்ளூர் ஓடிடி தளமான 'நீ ஸ்ட்ரீம்' தளமும் இப்போது தீவிர சினிமா ஆர்வலர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டது. இப்படித்தான், பிரபல ஓடிடி நிறுவனங்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு படைப்பு, ஒரு புதிய ஓடிடி தளத்தையே பிரபலமாக்க காரணமாக இருந்திருக்கிறது.

'நீ ஸ்ட்ரீம்' ஓடிடி தளத்தைப் பொறுத்தவரையில், முழுக்க முழுக்க மலையாளப் படங்களே காணக் கிடைக்கின்றன. இதன் மாதாந்திர கட்டணம் ரூ.210. 5 நாள்களுக்கு மட்டும் எனில் ரூ.140-ல் ஒரு ப்ளானும் இருக்கிறது. இதுபோல் வேறு சில ப்ளான்களும் உள்ளன. இந்தத் தளத்தில் லாகின் செய்தாலே போதும், மலையாளப் படங்கள் பலவும் இலவசமாகவே காணக் கிடைப்பது இன்னொரு சிறப்பு அம்சம்.

பொதுவாக, ஓடிடி தளங்கள் தலைதூக்க ஆரம்பித்தவுடன், சின்ன பட்ஜெட் படங்களுக்கும், எளிய - தரமான படைப்புகளுக்கும் மீட்பராகவே இருக்கும் என்று சாதகமான அம்சங்களில் பரவலாகப் பட்டியலிடப்பட்டது. அப்படி சில முன்னுதாரணங்களும் இருந்தன. ஆனால், 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்துக்கு நேர்ந்திருப்பது இங்கே நம்மை யோசிக்கவைக்கிறது. உள்ளூரில் உருவாகும் உருப்படியான படங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு 'நீ ஸ்ட்ரீம்' போல உள்ளூர் ஓடிடி தளங்களின் தேவையும் அவசியமாகிறது என்பதே அந்த சிந்தனை. இது மலையாளம் மட்டுமின்றி, தமிழ் உள்பட அனைத்து மாநில மொழிப் படங்களுக்குமே பொருந்தும்.

> நீ ஸ்ட்ரீம் தளத்தைக் காண neestream.com

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com