The Lost Bus
The Lost BusMatthew McConaughey

மிரட்டலான மேக்கிங், குறையாத பரபரப்பு... சினிமாவான நிஜ சம்பவம்! | The Lost Bus Review

படத்தின் ரைட்டிங் + மேக்கிங்தான் மிகப்பெரிய பலமே. படம் துவங்கி 15 நிமிடத்தில் இருந்து பரபரவென நகரும் திரைக்கதையாக அசத்துகிறது.
Published on
மிரட்டலான மேக்கிங், குறையாத பரபரப்பு... சினிமாவான நிஜ சம்பவம்! | The Lost Bus Review(3.5 / 5)

நகரை சூழ்ந்த தீயிலிருந்து குழந்தைகளை காக்க, ஒரு வாகன ஓட்டுநரின் போராட்டமே `The Lost Bus'.


கெவின் (Matthew McConaughey) தந்தை இறந்து போனபின் தாயை கவனித்துக் கொள்வதற்காக சொந்த ஊரான கலிஃபோர்னியா வருகிறார். வருமானத்துக்காக பாரடைஸ் நகரத்தை சார்ந்த பள்ளி ஒன்றின் பேருந்து ஓட்டுநராக பணியாற்றுகிறார். எப்போதும் போல் வேலைக்கு கிளம்பும் கெவினுக்கு இரண்டு எதிர்பாரா அதிர்ச்சி காத்திருக்கிறது. ஒன்று தன் மகன் ஷான்க்கு (Levi McConaughey) உடல்நிலை சரி இல்லை அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டிய நெருக்கடி. ஆனால் பள்ளி பேருந்தை சர்வீஸுக்கு விட்டுவிட்டு வீடு செல்லலாம் என நினைக்கிறார் கெவின். ஆனால் அன்று காலை அந்த நகரத்தின் ஓர் மூலையில் துவங்கிய காட்டுத் தீ மெல்ல மெல்ல நகரத்தை நோக்கி வந்து கொண்டிருக்க, பள்ளியில் இருக்கும் 22 குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியையை பாதுகாப்பாக கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு கெவினுக்கு வருகிறது. கெவின் இதில் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன என்பதே படத்தின் கதை.

2018 கலிஃபோர்னியா நிகழ்ந்த மிகப்பெரிய காட்டுத் தீ பாதிப்பை பற்றி Lizzie Johnson எழுதிய Paradise: One Town's Struggle to Survive an American Wildfire என்ற புத்தகத்தை மையமாக வைத்து Paul Greengrass இப்படத்தை இயக்கி இருக்கிறார். உண்மைக் கதைகளை எடுப்பதில் ஆர்வம் காட்டும் Paul இப்போது கையில் எடுத்திருக்கும் உண்மை சம்பவத்தையும் மிக இயல்பாக கொடுத்திருக்கிறார். எல்லா வகையிலும் இந்தக் கதையை பதைபதைக்க வைக்கும் அனுபவமாக கொடுக்க வேண்டும் என்ற முனைப்பு படம் முழுக்க தெரிகிறது.

The Lost Bus
The Lost BusMatthew McConaughey, America Ferrera

Matthew McConaughey நடிப்பு மொத்த படத்தையும் தாங்கிப் பிடிக்கிறது. இருளுக்குள் ஆங்காங்கேதான் அவர் முகமே தெரிகிறது. ஆனாலும் வாகனத்தை படபடப்புடன் ஓட்டும் உணர்வை பல காட்சிகளில் நமக்கு கடத்துகிறார். குழந்தைகளை பொறுப்பாக பார்த்துக் கொள்ளும் ஆசிரியராக America Ferrera. குழந்தைகளை சமாதானப்படுத்தவம், கெவினை முதலில் புரிந்து கொள்ளாமல் கத்துவதும், பின்பு அவருடைய ஐடியாவுக்கு தோள் கொடுப்பதுமாக சிறப்பு. ஓட்டுனர்களுக்கு உத்தரவுகளை கொடுக்கும் பாஸ் ரோலில் வரும் Ashlie Atkinson ஊழியர்களிடம் கறார் காட்டுவதும், பெற்றோர்களிடம் தன் கையறுநிலையை விளக்கும் காட்சிகளிலும் கவனிக்க வைக்கிறார்.

படத்தின் ரைட்டிங் + மேக்கிங்தான் மிகப்பெரிய பலமே. படத்தின் துவக்கத்தில் 10 நிமிடங்களுக்குள்ளாகவே, ஹீரோவின் பின்னணி என்ன? அவர் வீட்டுக்கு போயாக வேண்டிய சூழலையும் நமக்கு அறிமுகப்படுத்திவிட்டு, அதன் பின் அவருக்கு ஏற்படும் நெருக்கடிகளை காட்டுவது, படம் துவங்கி 15 நிமிடத்தில் இருந்து பரபரவென நகரும் திரைக்கதையாக அசத்துகிறது. மிகப்பெரிய டிசாஸ்டர் பற்றிய படம், அதிலிருந்து ஒரு குழு எப்படி தப்புகிறார்கள் என்ற கதையை விஷுவலாக எவ்வளவு உண்மை தன்மையுடன் காட்டுகிறோம் என்பதுதான் முக்கியம். அதற்கேற்ப முதன் முதலில் தீ பிடிக்கும் காட்சியில் இருந்து மொத்த நகரமும், நரகம் போல் தீ பிடித்து கோரமாக காட்சி அளிப்பதை அட்டகாசமாக கொண்டு வந்திருக்கிறார்கள். உயர உயரமான மின் கம்பங்களை காட்டும் போதும், கொடூரமாக பற்றி எரியும் நெருப்பு சூழ்ந்த பகுதிகளை காட்டும் போதும் அதற்கு ஏற்ப செய்யப்பட்டுள்ள சவுண்ட் டிசைன் மிகக்கச்சிதம்.

The Lost Bus
The Lost BusMatthew McConaughey

குழந்தைகளை காப்பாற்ற ஓட்டுநர் பாடுபடும்போது, நகரத்தை மீட்க இன்னொரு டீம் எப்படி செயல்படுகிறது என்பதை காட்டியதும் சுவாரஸ்யத்தை கூட்டுகிறது. ஒரு பக்கம் காட்டுத்தீ இன்னொரு பக்கம் டிராஃபிக் ஜாம், பேருந்தில் நுழைய நினைக்கும் திருடர்கள் என கதையில் சூடு குறையாமல் நகர்த்த சில விஷயங்களை சேர்த்திருக்கிறார்கள். அது ஒர்க் ஆனாலும் சில இடங்களில் திணிப்பாக தெரிகிறது. மேலும் பேருந்தை நிறுத்தி வைக்கலாம் என எடுக்கும் முடிவும் அத்தனை லாஜிக்காக இல்லை. ஒரு சின்ன பையன் சொல்லும் விஷயத்தை கேட்டு தன் தவறை ஹீரோ சரி செய்து கொள்ளும் இடம் க்யூட்.

ஒட்டு மொத்தமாக பார்த்தால், ஒரு தரமான பரபரபப்பான படத்தை பார்க்க விரும்பினால் தாராளமாக `The Lost Bus'ல் ஏறலாம். ஆப்பிள் டிவி ப்ளஸ்-ல் படம் காணக்கிடைக்கிறது. இணையத்தில் கொடுக்கப்படும் ஹைப் எல்லாவற்றுக்கும் ஒர்த்தான படம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com