மீண்டும் வரும் தாமஸ் ஷெல்பி... Peaky Blinders The Immortal Man | Cillian Murphy
`Peaky Blinders: The Immortal Man' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. உலகம் முழுக்க தனி ரசிகர் கூட்டத்தைக் கொண்டுள்ள சீரிஸ் `Peaky Blinders'. 2013இல் தொலைக்காட்சி தொடராக ஒளிபரப்பான இது 2014இல் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியானது. ஆறு சீசன்கள் கொண்ட இந்த சீரிஸ் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. 1919 - 1935 வரை இங்கிலாந்தில் ஷெல்பி சகோதரர்கள், எப்படி ஒரு சாம்ராஜ்யத்தை நடத்தினார்கள் என்பதுதான் இந்த சீரிஸின் கதை.
இந்த சீரிஸுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, இதே சீரிஸை மையப்படுத்தி ஒரு படம் உருவாக்குவது என முடிவு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் 2024இல் துவங்கப்பட்டது. `Peaky Blinders' சீரிஸின் கதையை எழுதிய Steven Knight இப்படத்துக்கான கதையை எழுத, Tom Harper படத்தை இயக்கினார். சீரிஸில் தாமஸ் ஷெல்பியாக நடித்த Cillian Murphyதான் இதிலும் நாயகன்.
Peaky Blindersஇல் நடந்த நிகழ்வுகளுக்குப் பிறகு நடக்கும் கதையாக உருவாகியுள்ளது இந்தப் படம். 1940இல் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ப்ரிம்மிங்ஹேமுக்கு மீண்டும் திரும்புகிறார், தலைமறைவாக வாழ்ந்து வந்த ஷெல்பி. குடும்பம் மற்றும் நாட்டின் எதிர்காலம் ஒருபுறம், தனது சொந்த பிரச்னைகள் மறுபுறம் என அவர் சந்திக்கும் சவால்கள் என்ன என்பதைச் சொல்ல இருக்கிறது படம். இப்படத்தின் ட்ரெய்லர் இப்போது வெளியாகியுள்ளது. படம் மார்ச் 6ஆம் தேதி சில தேர்ந்தெடுக்கப்பட்ட திரையரங்குகளிலும், மார்ச் 20ஆம் தேதி நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் தளத்திலும் வெளியாகவுள்ளது.

