10 கோடி பட்ஜெட்... 1000+ கோடி வசூல்... அதிரடி காட்டும் Obsession!
ஹாலிவுட்டில் குறைந்த பட்ஜெட்டில் உருவான ‘Obsession’ படம், டாக்சிக் ரிலேஷன்ஷிப் மற்றும் One Wish Willow என்ற மூடநம்பிக்கையை மையமாகக் கொண்டு அதிரடி வெற்றி கண்டுள்ளது. Curry Barker இயக்கத்தில், Michael Johnston, Inde Navarrette நடித்த இந்த படம், 1 மில்லியன் டாலர் (சுமார் 9.51 கோடி) செலவில் தயாராகி, உலகம் முழுவதும் 150 மில்லியன் டாலர் (சுமார் 1500 கோடி) வசூலித்து, 150 மடங்கு லாபம் ஈட்டி, ஹாலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
ஹாலிவுட் சினிமா என்றாலே பிரம்மாண்ட படங்கள் தான் நம் நினைவுக்கு வரும். இவை தாண்டி பல சின்ன பட்ஜெட் படங்களும் வெளியாகி ஹிட் ஆவது உண்டு. அப்படி தற்போது ஒரு படம் வந்திருக்கிறது. சின்ன பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் மொத்த ஹாலிவுட்டையும் அலறவிட்டு அடித்து ஆடுகிறது. Curry Barker இயக்கத்தில் Michael Johnston, Inde Navarrette நடித்து கடந்த வாரம் வெளியான `Obsession' படம் தான் அது.
இசைக்கருவிகள் விற்பனையகத்தில் பணியாற்றும் பாரோனுக்கு அவனுடன் பணியாற்றும் நிக்கி ஃபிரீமேன் மீது ஒருதலைக்காதல். அமெரிக்காவில் மிகப்பிரபலமான மூடநம்பிக்கைகளில் ஒன்று One Wish Willow. ஒரு சின்ன குச்சி, அதனை உடைகையில் நாம் என்ன மனதில் நினைக்கிறோமோ அது நிஜமாகும் என்பது நம்பிக்கை. நிக்கி தன் மீது காதலில் விழ வேண்டும் என One Wish Willow வை உடைக்கிறார் பாரேன். அதன் பின் நடக்கும் காதல் டார்ச்சர்கள் தான் கதை.
டாக்சிக் ரிலேஷன் ஷிப் என்பதை மையப்படுத்திய இந்தப் படம் தான் இப்போது பேயாட்டம் ஓடுகிறது. வெளிநாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலும் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. திரையிடும் அத்தனை காட்சிகளும் நம்ம ஊர் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் படம் போல டிக்கெட் விற்று தீருகிறது. அரங்கம் நிறைந்த காட்சிகளாக அசத்துகிறது. இந்தப் படத்தின் மொத்த பட்ஜெட்டே 1 மில்லியன் டாலர்கள் தான். நம்ம ஊர் காசுக்கு 9.51 கோடி ரூபாய். இதன் வசூல் எவ்வளவு தெரியுமா? கிட்டத்தட்ட 150 மில்லியன் டாலர். இந்திய மதிப்பில் 1500 கோடி வசூலித்திருக்கிறது. 150 மடங்கு லாபம். இன்னும் பெரிய வசூல் செய்யும் எனவும் சொல்லப்படுகிறது. படம் இவ்வளவு பெரிய ஹிட், அதே சமயம் படத்துக்கு உலகம் முழுக்க வரவேற்பும் பெரிய அளவில் இருக்கிறது. இந்தப் படம் தான் இப்போது சினிமா வட்டாரத்தில் பேசி பொருளாக இருக்கிறது.

