அமெரிக்காவில் ‘பிகில்’ ரிலீஸ் எப்போது?: அட்லியை பாராட்டிய ஹாலிவுட் இயக்குநர்
‘பிகில்’ டிரைலரை பார்த்த ஹாலிவுட் நடிகரும் இயக்குநருமான பில் டியூக் ட்விட்டரில் இயக்குநர் அட்லியை பாராட்டியுள்ளார். ’பிகில்’ திரைப்படத்தின் டிரைலர்நேற்று மாலை ஆறு மணிக்கு வெளியானது. விஜய், நயன்தாரா, விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆகிறது.
இந்த டிரைலர் வெளியான சில மணி நேரங்களிலேயே சுமார் 10 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இது மிகப் பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. மேலும், 1 மில்லியன் லைக்குகளையும் இந்த ‘பிகில்’ படத்தின் டிரைலர் யூடியூபில் பெற்றுள்ளது. மேலும் பிகில் படத்தின் டிரைலரை பாலிவுட் பிரபலங்கள் பலரும் பாராட்டினர். முக்கியமாக பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் தன்னுடைய ட்விட்டரில், ‘படம் சிறப்பான ஒன்றாக அமைய நண்பர்கள் அட்லி, விஜய் மற்றும் ஏர்.ஆர்.ரஹ்மான் ஆகியோருக்கு என்னுடைய வாழ்த்துகள். சக் தே இந்தியா படம் போல் உள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பிகில் டிரைலரை பார்த்துவிட்டு பிரபல ஹாலிவுட் நடிகரும் இயக்குநருமான பில் டியூக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "இயக்குநர் அட்லி, சிறப்பான டிரைலர் இது. அமெரிக்காவில் ‘பிகில்’ எப்போது ரிலீஸ் ஆகும் ? ‘பிகில்’ படத்துக்கு சிறப்பு காட்சி அமெரிக்காவில் திரையிடப்படுகிறதா ? அப்படியென்றால் நிச்சயம் தெரிவியுங்கள். நன்றியும் ஆசிர்வாதங்களும்" என பதிவிட்டுள்ளார். அதற்கு பதிலளித்த அட்லீ "நன்றி சார் நிச்சயமாக" என கூறியுள்ளார்.