“ஏன் இந்தி மட்டும்.., தமிழிலும் பேசவா?” - கேள்வி எழுப்பியவரை அமைதியாக்கிய டாப்ஸி
இந்தியில் பேசக்கூறி வலியுறுத்திய நபருக்கு நடிகை டாப்ஸி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
கோவாவில் சர்வதேச திரைப்பட திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக நேற்று நடிகை டாப்ஸி கலந்து கொண்டார். அவரிடம் அங்கு கூடியிருந்தவர்கள் கலந்துரையாடினார்கள். பலரின் கேள்விக்கு டாப்ஸி ஆங்கிலத்தில் பதில் அளித்தார். அப்போது திடீரென கூட்டத்தில் இருந்து குரல் எழுப்பிய நபர் ஒருவர் டாப்ஸியை இந்தி மொழியில் பேசக்கூறி வலியுறுத்தினார்.
அதற்கு பதில் அளிக்கும் விதமாக கூட்டத்தை பார்த்து பேசிய டாப்ஸி, ''இங்கு உள்ளவர்கள் அனைவருக்கும் இந்தி புரியுமா?'' என கேள்வி எழுப்பினார். பலரும் தெரியாது எனக்கூறி தலையசைத்தனர். மீண்டும் டாப்ஸி ஆங்கிலத்திலேயே தொடர்ந்தார். ஆனால் அந்த நபர் ''நீங்கள் பாலிவுட் நடிகை அதனால் இந்தியில் தான் பேச வேண்டும்'' என மீண்டும் கூறினார்.
இதற்கு உடனடியாக பதில் அளித்த டாப்ஸி, ''நான் தமிழ், தெலுங்கிலும் நடிக்கிறேன். அப்படி என்றால் நான் இப்போது தமிழில் பேசவா?'' என்று கேள்வி எழுப்பினார். டாப்ஸியின் பதிலால் அந்த நபர் அமைதியாக, அரங்கமே கைத்தட்டி டாப்ஸின் பதிலுக்கு வரவேற்பு தெரிவித்தது. அமிதாப்பச்சனுடன் நடித்தது எப்படிப்பட்ட அனுபவத்தை கொடுத்தது என சிலர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த டாப்ஸி, திரைப்பட நடிப்பு அனுபவம் தொடர்பான கேள்விகளை விடவும் நல்ல கேள்விகளை நான் மக்களிடையே எதிர்பார்க்கிறேன் என தெரிவித்தார்.
மேலும் தென்னிந்திய சினிமா குறித்து பேசிய டாப்ஸி, தென்னிந்திய சினிமா எனக்கு பலவற்றை கற்றுக்கொடுத்துள்ளது. நடிப்பு என்றால் என்ன, கேமரா என்றால் என்ன உள்ளிட்ட சினிமா குறித்த அடிப்படைகளை எனக்கு கற்றுக்கொடுத்தது. பாலிவுட்டில் நுழைய ஒரு பாதையாக நான் தென்னிந்திய சினிமாவை என்றுமே பார்த்ததில்லை. அது முட்டாள் தனமானது. என்றுமே நான் தென்னிந்திய சினிமாவை விட்டுக்கொடுக்க மாட்டேன்.தொடர்ந்து பணியாற்றுவேன் என தெரிவித்தார்