நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை இல்லை: சென்னை உயர்நீதிமன்றம்
நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை இல்லை என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.
கொரோனாவுக்கு பயந்து காணொலியில் விசாரிக்கும் நீதிமன்றம் மாணவர்களை தேர்வு எழுத சொல்வதா என நடிகர் சூர்யா கேள்வி எழுப்பியிருந்தார். இது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார். இருந்தாலும் சூர்யாவின் கருத்தை பெருந்தன்மையாக மன்னித்துவிடலாம் என முன்னாள் நீதிபதிகளும் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் சாஹி மற்றும் செந்தில் குமார் ராமமூர்த்தி ஆகியோர் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர். இதுகுறித்து 29 பக்க உத்தரவை நீதிபதிகள் வழங்கினர். அதில், அரசு தலைமை வழக்கறிஞர் ஆலோசனைக்கு பிறகு சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை என உத்தரவிட்டனர். அதேசமயம் சூர்யா, கவனமுடன் பேச வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் நீதிமன்றத்தையோ, நீதிபதிகளையோ விமர்சனம் செய்யக் கூடாது எனவும் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. விமர்சனங்கள் நியாயமாக இருக்க வேண்டுமே தவிர, எல்லை மீறக் கூடாது எனவும் நீதிபதிகள் அறிவறுத்தியுள்ளனர்.

