’அருவி’ படத்தின் ஹீரோயினை 8 மாதமாக தேடி தேர்வு செய்திருக்கிறது படக்குழு.
ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’அருவி’. இதை கே.எஸ். ரவிகுமாரிடம் துணை இயக்குநராக பணியாற்றிய அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு, ஷெல்லி கலிஸ்ட். இசை, பிந்து மேனன், வேதாந்த பரத்வாஜ்.
‘இதன் ஹீரோயின் தேர்வு மட்டும் 8 மாதம் நடந்தது. பின்னர் அதீதி பாலன் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். அவர் ’அருவி’ என்ற டைட்டில் கேரக்டரில் நடித்துள்ளார். அருவி எனும் பெண்ணின் வாழ்க்கையில் நடக்கக்கூடிய சுவாரஸ்யமான விஷயங்களின் தொகுப்புதான் படம். ஒரு கோணத்தில் இருந்து பார்த்தால் படம் அருவி என்ற பெண்ணின் பயாகிராபி போல் இருக்கும். இன்னொரு கோணத்தில் அருவி சந்திக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள், அவள் கடந்து செல்லும் பாதையில் நிகழும் பிரச்சனை , அவள் சந்திக்கும் மனிதர்கள் என சமூகம் சார்ந்து பேசும் கதையாக இருக்கும்’ என்றது படக்குழு.
இதில் முகமது அலி பாய்க் என்ற ஐதராபாத்தை சேர்ந்த தியேட்டர் ஆர்டிஸ்ட், அஞ்சலி வரதன் என்ற திருநங்கை, லட்சுமி கோபால்சாமி என்ற கன்னட நடிகை உட்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் நடித்துள்ளனர்.