பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ’காலா’ படத்தின் ஷூட்டிங் மும்பையில் நேற்று தொடங்கியது. ரஜினிகாந்த் நடிக்கும் 164-வது படமான இதில், ஹூமா குரேஸி ஹீரோயின். இவர் வயதான கெட்டப்பில் வருகிறார்.
மற்றும் அஞ்சலி பாட்டீல், ஈஸ்வரிராவ், சமுத்திரக்கனி, சம்பத், ரவிகாலே, சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், சுகன்யா உட்பட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கபிலன், உமாதேவி பாடல்கள் எழுதுகின்றனர். முரளி. ஜி ஒளிப்பதிவு செய்கிறார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது.
தமிழகத்தில் இருந்து சென்று மும்பையில் தாதாவாக விளங்கிய ஹாஜி மஸ்தான் வாழ்க்கை கதைதான் ’காலா’ என்று கூறப்பட்டது. ஆனால், படக்குழு மறுத்தது. இந்நிலையில் நெல்லையை சேர்ந்த திரவிய நாடார் என்பவரின் வாழ்க்கையை படமாக்கி வருவதாகத் தெரிகிறது. படத்தில் ரஜினிகாந்த் நெல்லை வழக்கில் பேசி நடிக்கிறார்.
இந்நிலையில் ரஜினிக்கு வில்லனாக, இந்தி நடிகர் நானா படேகர் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இவர், தமிழில் பாரதிராஜாவின் ’பொம்மலாட்டம்’ படத்தில் நடித்தவர்.
மும்பையில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது. பிறகு சென்னை அருகே போடப்பட்டுள்ள தாராவி செட்டில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.