ஹாரிஸ் ஜெயராஜ் வெறும் மெலடி கிங் மட்டும்தானா? - பிறந்த நாள் சிறப்பு தொகுப்பு!

ஹாரிஸ் ஜெயராஜ் வெறும் மெலடி கிங் மட்டும்தானா? - பிறந்த நாள் சிறப்பு தொகுப்பு!
ஹாரிஸ் ஜெயராஜ் வெறும் மெலடி கிங் மட்டும்தானா? - பிறந்த நாள் சிறப்பு தொகுப்பு!

மார்கழி என்றாலே இசை கச்சேரிகளுக்கு புகழ்பெற்ற மாதமாகத்தான் இருக்கும். அதுவும் தமிழ் திரையிசை ரசிகர்களுக்கு மார்கழி மாதம் எப்போதும் டபுள் தமாக்கா கொண்டாட்டமாகத்தான் இருக்கும். ஏனெனில் ஜனவரி 6ம் தேதி இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாளை எக்கச்சக்கமான ட்வீட்கள், இன்ஸ்டா ரீல்ஸ் உள்ளிட்ட பதிவுகளாக இட்டுத் தள்ளி கொண்டாடி தீர்த்த ரசிகர்களுக்கு மற்றுமொரு குஷியான நாளாகத்தான் இன்று ஜனவரி 8 இருக்கிறது.

ஏனெனில் கோலிவுட்டின் மெலடி கிங் என அனைவராலும் அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் 48வது பிறந்த நாள் இன்று. இதனையொட்டி ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலும் ஹாரிஸ் ஜெயராஜின் ஹிட் பாடல்களை பதிவிட்டு அவரது இசையுடனான தங்களது நாஸ்டால்ஜியாவை பகிர்ந்து வருகிறார்கள் ரசிகர்கள்.

ஒரு இசை எந்த காலத்து மக்களையும் எப்போதும் ஆக்கிரமிக்கும் என்பதற்கு ஹாரிஸ் ஜெயராஜின் இசைக்கும் விதிவிலக்கல்ல என்றே சொல்லலாம். அதுவும் இசையமைப்பாளராக அறிமுகமான முதல் படத்தில் போடப்பட்ட அத்தனை பாடல்களும், பின்னணி இசையும் 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஒரு ஃப்ரஷ்ஷான உணர்வையே கொடுக்கும் அளவுக்கு சிறப்பான சம்பவமாக செய்திருப்பார் ஹாரிஸ்.

1992ம் ஆண்டு ரோஜா படம் வந்த போது தமிழ் சினிமாவின் இசை உலகில் மிகப்பெரிய இசைப் புரட்சியையே ஏ.ஆர்.ரஹ்மான் செய்திருப்பார். அதற்கடுத்த ஒரு தசாப்தத்தமாக கோலிவுட்டை கட்டி ஆண்டு வந்தார் ரஹ்மான். ARR கட்டிய அதே கோட்டையை போல மின்னலே என்ற படத்தின் ஆல்பம் மூலம் கோலிவுட்டுக்கு மற்றுமொரு இசை புரட்சிக்கான கோட்டையை திறக்க வழிவகுத்தார் ஹாரிஸ் ஜெயராஜ்.

இரு விழி உனதே, வசீகரா, வெண்மதியே, அழகிய தீயே, மேடி, ஓ மாமா, நெஞ்சை பூப்போல் என தொட்ட பாட்டெல்லாம் சூப்பர் ஹிட்டடித்து ரசிகர்களின் நெஞ்சை பூவாக உதிரச் செய்து வேரோடு ஹாரிஸ் பதிய தொடங்கிய காலம் 2001. அதன் பிறகு மஜ்னு, 12பி, சாமுராய், லேசா லேசா, சாமி, கோவில், காக்க காக்க, செல்லமே, அருள், தொட்டி ஜெயா, உள்ளம் கேட்குமே, அந்நியன், கஜினி, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், உன்னாலே உன்னாலே, பீமா, தாம் தூம், சத்யம், வாரணம் ஆயிரம், அயன், ஆதவன், எங்கேயும் காதல் என அடுத்த பத்தாண்டுகளுக்கு பக்காவான பாடல்களை சிந்தாமல் சிதறாமல் அள்ளி வீசியிருப்பார் ஹாரிஸ் ஜெயராஜ்.

2011ம் ஆண்டுக்கு பிறகு 2020,21ம் ஆண்டுகளை தவிர மற்ற எல்லாம் ஆண்டுகளிலும் கோ, ஏழாம் அறிவு, ஒரு கல் ஒரு கண்ணாடி, மாற்றான், துப்பாக்கி, இரண்டாம் உலகம், என்றென்றும் புன்னகை, என்னை அறிந்தால், அனேகன், வனமகன் என ஹாரிஸ் இசையமைத்த படங்களின் லிஸ்ட் நீளும் அதே சமயத்தில் பாடல்களின் ஹிட் லிஸ்ட்டுக்கும் பின்னணி இசைக்கும் பஞ்சமே இருக்காது.

அண்மையில் தயாரிப்பாளர் தில் ராஜூ வாரிசு படத்தை பற்றி சிலாகித்து பேசியிருப்பார். அதனை மீம் டெம்ப்ளேட்டாகவே மாற்றி நெட்டிசன்கள் பல மீம்ஸ்களை பதிவிட்டு வருகிறார்கள். அதன்படி மெலடி கிங்காக அறியப்பட்டிருக்கும் ஹாரிஸ் ஜெயராஜை வைத்து, “குத்து பாட்டு வேணுமா திருநெல்வேலி அல்வாடா, டங்காமாரிம் டமக் டமக் டம்மா இருக்கு, ஃபீல்குட் பாடல்கள் வேணுமா ஏலே ஏலே தோஸ்துடா, கனவுகள் பெரிய கனவுகள், சோக பாடல்கள் வேணுமா ஓ மனமே, திமு திமு தீம் தீம் இருக்கு, பார்ட்டி பாடல்கள் வேணுமா அதாரு அதாரு, கால் முளைத்த பூவே, அக நக சிரிப்புகள் இருக்கு, லவ் பாடல்கள் வேணுமா என்னமோ ஏதோ, பூப்போல் பூப்போல், அழகிய தீயே, எங்கேயும் காதல் இருக்கு, எமோஷனல் பாடல்கள் வேணுமா அவ என்ன என்ன, யாரோ யாரோ, தொடு வானம் இருக்கு. இப்படி எல்லாமே ஹாரிஸ் பாடல்கள்ள இருக்கு” என மீம் போட்டு பகிரப்பட்டிருக்கிறது.

இசை உலகின் புயலாக ஏ.ஆர்.ரஹ்மான் இருந்தால் புதையலாக ஹாரிஸ் இருந்து வருகிறார். நடிகரும் விமர்சகருமான பாஸ்கி ஒரு முறை இப்படி சொல்லியிருப்பார். அதாவது, “புதுசா ஹெட்ஃபோன் எதும் வாங்கினா ஹாரிஸ் ஜெயராஜோட பாடல்களை போட்டு டெஸ்ட் பண்ணினா போதும்” என்றிருப்பார். அதேபோல 2.1, 5.1, 7.1 என எந்த வகையான ஆடியோ சிஸ்டமில் ஹாரிஸின் பாடல்களை கேட்டாலும் எல்லாவற்றிலும் கனக்கச்சிதமாக பொருந்தக் கூடிய இனிமையான பல படைப்புகளையே கொடுத்திருக்கிறார்.

90,2K கிட்ஸ் என இரண்டு தசாப்தங்களாக இளசுகள் அனைவரையும் இசையால் கட்டிப்போட்ட பெருமை ஹாரிஸூக்கும் சேரும் என்பதில் அவரது கடந்தகால பாடல்களே சாட்சியாக இருக்கும். பாடல்கள் மட்டுமா BGM-லயும் ஐய்யா கில்லிடா என்பது போலவே ஹாரிஸ் இசையமைத்த பின்னணி இசைகளும் இருக்கும். சாமி படத்தின் அந்த COP theme ஆகட்டும், என்னை அறிந்தால் தீம், குறிப்பாக மஜ்னு படத்தில் பிரஷாந்த் ஹிரோயினை சந்திக்கும் போது வரும் BGM இப்போ கேட்டாலும் புத்துணர்ச்சியாகத்தான் இருக்கும்.

இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் 50க்கும் மேலான படங்களில் மட்டுமே பணியாற்றியிருந்தாலும் இசையமைப்பின் தொழில்நுட்ப கலைஞராக கிட்டத்தட்ட 600க்கும் மேலான படங்களில் இளையராஜா நீங்கலாக ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா என அனைவரிடத்திலும் பணியாற்றியிருக்கிறார். அதுவும் சொற்ப அளவிலான சம்பளத்துக்காக. தனது 12 வயதில் இருந்தே திரையிசை துறையில் பணியாற்றி வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம், இந்தி, போஜ்புரி, மராத்தி, பஞ்சாபி என இந்தியாவின் பெரும்பாலான மொழிப் படங்களிலும் புரோகிராமரா கால் பதித்திருக்கிறார் ஹாரிஸ்.

வாலிப கவிஞர் வாலி ஒரு விழாவில் “முதல் படத்திலேயே மிகப்பெரிய லெஜெண்டாக மாறியிருக்கிறார் ஹாரிஸ். ஆனால் ஒரு மனுஷன் உயரது பெருசில்ல. விண்ணளவு உயர்ந்தாலும் மண்ணை பார்த்து நடக்கும்னு சொல்லுவாங்க. ஹாரிஸ் இன்னமும் மண்ணை பார்த்துதான் நடக்குறாரு. ஆக, விண்ணைவிட உயரமான இடத்தில் அவர் புகழ்பெறுவார் என்பதில் ஐயமே இல்லை” என கூறியிருப்பார். அதேபோல கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டே படத்தின் ரீ ரெக்கார்டிங் வேலையின் போது இயக்குநர் ராஜீவ் மேனன் தாணுவிடம் “இவரை நோட் பண்ணிக்கோங்க. எதிர்காலத்துல பெரிய ஆளா வருவாரு” என சொல்லியதாக விருதுவில் கலைப்புலி தாணு வெளிப்படுத்தியிருப்பார்.

இப்படியாக இசைத் துறையில் ஹாரிஸ் பல மைல்ஸ்டோன்களை கடந்து வந்து இசையமைப்பாளர் என்ற அங்கீகாரத்தோடு இருந்தாலும் வின்டேஜ் ஹாரிஸின் பாடல்கள் மீண்டும் வேண்டும் என்ற ஆவலோடு ரசிகர்கள் வெகுநாட்களாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை எதிர்பார்ப்புக்கு ஹாரிஸ் ஜெயராஜ் விரைவில் தீனி போடுவார் என்ற நம்பிக்கையோடு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com