மக்கள் கலைஞன் ‘வைகை புயல்’ வடிவேலு பிறந்த தினம் இன்று..!

மக்கள் கலைஞன் ‘வைகை புயல்’ வடிவேலு பிறந்த தினம் இன்று..!

மக்கள் கலைஞன் ‘வைகை புயல்’ வடிவேலு பிறந்த தினம் இன்று..!
Published on

தமிழக மக்களின் இதயங்களை தனது அசாத்திய கலைத் திறனால் கொள்ளையடித்த வைகை புயல் வடிவேலு, தனது 57-வது பிறந்ததினத்தை இன்று கொண்டாடுகிறார்.

வைகைப் புயல் வடிவேலு, 1960 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் நாள் மதுரையில் பிறந்தார். அவரது தந்தை நடராச பிள்ளை, தாயார் வைத்தீஸ்வரி. 1991 ஆம் ஆண்டு கஸ்தூரிராஜாவின் இயக்கத்தில், ராஜ்கிரண் தயாரித்து, கதாநாயகனாகவும் நடித்த ‘என் ராசாவின் மனசிலே’ என்ற திரைப்படத்தில் முதன் முதலாக ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். அந்த படத்தில் ‘போடா போடா புண்ணாக்கு’ என்ற பாடலையும் பாடினார். இதனால், தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ஒரு நடிகனாகவும், பாடகனாகவும் தன்னுடைய பெயரைத் தமிழ் சினிமாவில் பதிவு செய்தார். அதன்பிறகு கமல், ரஜினி உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நகைச்சுவை கதாபாத்திரங்களில் அசத்தினார்.

1991 ஆம் ஆண்டு தொடங்கி 2005 வரை பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துவந்த இவர், 2006 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கரின் தயாரிப்பில் சிம்புதேவனின் இயக்கத்தில் வெளிவந்த ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ என்ற திரைப்படத்தில் முதன் முதலாக இரட்டை வேடங்களில் கதாநாயகனாக நடித்தார். இதில் இவர் ஏற்று நடித்த இரண்டு கதாபாத்திரங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. வரலாற்று பின்னணியை கதையாக கொண்டு முழு நீள நகைச்சுவை திரைப்படமாக உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றுத் தந்தது. அதன் பிறகு, 2008 ஆம் ஆண்டு தம்பி ராமையா இயக்கத்தில் ‘இந்திரலோகத்தில் நா அழகப்பன்’ என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்தார்.

வடிவேல் பாடிய சில திரைப்பாடல்கள்:

எட்டணா இருந்தா - எல்லாமே என் ராசாதான்

சிரிப்பு வருது சிரிப்பு வருது - வெற்றி கொடுக் கட்டு

ஊனம் ஊனம் - பொற்காலம்

போடா போடா புண்ணாக்கு - என் ராசாவின் மனசிலே

வாடி பொட்ட புள்ள வெளியே - காலம் மாறிபோச்சு

ஆடிவா பாடி வா - இம்சை அரசன் 23ஆம் புலிகேசி

கட்டுனா அவளை கட்டுனும்டா - ஜெயசூர்யா 

வடிவேலுவின் சில நகைச்சுவை வசனங்கள்:-

இப்பவே கண்ண கட்டுதே

ஏன்டா! இன்னுமா இந்த ஊரு நம்பள நம்பிக்கிட்டு இருக்கு

என்ன! சின்ன புள்ளத் தனமா இருக்கு

வேணாம்..வேணாம்! வலிக்குது… அழுதுடுவேன்

இது தெரியாம போச்சே

மாப்பு வெச்சிட்டாங்கையா ஆப்பு

ஏன்! நல்லாத்தானே போயிட்டிருக்கு

போவோம்! என்ன பண்ணிடுவாங்க

முடியல!

என்னைய வெச்சி காமடி கீமடி பண்ணலையே?

நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்!!

ஆஹா ஒரு குருப்பா தான்யா அலையறாங்க

க க க போ…! 

பட் எனக்கு அந்த டீலிங் புடிச்சிருக்கு

என்னா வில்லத்தனம்

பில்டிங் ஸ்ட்ராங்கு ஆனா பேஸ்மட்டம் வீக்கு

எதையுமே பிளான் பண்ணாம பண்ணக்கூடாது

ஓபனிங் நல்லாதான் இருக்கு ஆனா பினிஷிங் சரியில்லையே

ரிஸ்க் எடுக்கிதெல்லாம்தான் எனக்கு ரஸ்க்கு சாப்பிடற மாதிரி

ஒரு சிறிய புறாவுக்கு போரா? பெரிய அக்கபோராகவல்லவா இருக்கிறது

நானும் ரவுடி தான்.. நானும் ரவுடி தான்..

நா ஜெயிலுக்குப் போறேன்... ஜெயிலுக்குப் போறேன்

சண்டையில கிழியாத சட்ட எங்கிருக்கு

வட போச்சே

உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆக்கிட்டாங்களே

அவ்வ்வ்வ்வ்...!

எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாண்டா.. ரொம்ப நல்லவன்டா

இந்த கோட்டை தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன்.. பேச்சு பேச்சாதான் இருக்கணும்..

ஆரம்பிச்சிட்டாங்கயா ஆரம்பிச்சிட்டாங்க

ஒரு ஆணியையும் புடுங்க வேணாம்

எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது..

சுமார் இருபது ஆண்டுகளாக சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இவர், 2011 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க-விற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆனால் தேர்தலில் தி.மு.க தோல்வியை தழுவியது. தேர்தல் முடிவுக்கு பிறகு, சுமார் 20 மாதங்களுக்கும் மேல் அவர் சினிமாக்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் ஒதுங்கியே இருந்தார். பின்னர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி பல்வேறு படங்களில் பணியாற்றி வருகிறார். என்.எஸ் கிருஷ்ணன், சந்திரபாபு, டி.எஸ் பாலையா, நாகேஷ், கவுண்டமணி, செந்தில் ஆகியோரை தொடர்ந்து தற்போது சமகாலத்தில் அனைவரையும் கவர்ந்த நகைச்சுவை நடிகராக வடிவேலு திகழ்ந்து வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com